கூத்துக் கலையை முன்னிலைப்படுத்தி தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படைப்புகள் வருகை தந்து.. ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அந்த வகையில் தெருக்கூத்தினை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த ஆர்யமாலா எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தக் கதை 1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா ஜித். இவளுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். மனிஷா பருவ வயதை கடந்த பின்னரும் பூப்படையாமல் இருக்கிறார். இவருடைய தங்கை ஒரு நாள் வயதுக்கு வந்து விடுகிறார். இது மனிஷாவிற்கு சந்தோஷத்தை அளிக்காமல் வருத்தத்தை அளிக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் மனிஷாவையும், அவரது தாயையும் மறைமுகமாக குறை கூறுகிறார்கள். வயதுக்கு வந்த இளைய மகளை வீட்டுடன் வைத்திருந்தால்.. வயதுக்கு வராத மூத்தவள் மனம் சங்கடப்படுவாள் என கருதி தாயானவள் .. வயதுக்கு வந்த இளைய மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். வயதுக்கு வராத கதையின் நாயகியான மனிஷா பூப்படைவதற்காக காவல் தெய்வத்தை வணங்குகிறார். அத்துடன் அந்த ஊரில் உள்ள சித்த வைத்தியரிடம் மருந்து வாங்கி சாப்பிடுகிறார். 48 நாட்களுக்குள் பூப்படைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் மருந்தை சாப்பிடத் தொடங்குகிறாள் மனிஷா.. நாட்கள் செல்ல செல்ல அவள் மனம் குதூகலிக்கிறது. அத்துடன் அவள் பூப்படைகிறாள். பூப்படைவதுடன் மட்டுமல்லாமல் தன் மனம் கவர் ஆண்மகன் ஒருவனையும் அந்த காவல் தெய்வ ஆலயத்தில் வைத்து காண்கிறாள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்கிறது என நினைக்கும் போது… இவை அனைத்தும் கனவு என யதார்த்தத்தை உணர்கிறார். அதன் பிறகு நிஜத்தில் அவள் பூப்படையவில்லை. ஆனால் கனவில் கண்ட ஆண்மகன் அவரது ஊரில் கூத்து கட்டும் கலைஞராக வருகை தருகிறார். அவரை பார்த்ததும் மனம் தடுமாறுகிறார் மனிஷா. அதனால் கர்த்தவராயன் எனும் கூத்தினை நிகழ்த்த வந்த நாயகன் கார்த்திக் – மனிஷாவை காதலிக்க தொடங்குகிறார். இந்த காதல் நிறைவேறியதா? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா? நாயகி மனிஷா பூப்படைந்தாளா? இல்லையா? என்பதை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
ஒரு பெண் தாய்மை அடைவதற்குரிய தகுதியை பெறவில்லை. இதனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னவாகிறது? என்பதை மண்ணின் மணத்துடன் இயக்குநர்கள் குழு விவரித்திருக்கிறது. எதார்த்தத்தை பதிவு செய்த படக்குழு கதாபாத்திரத்தை குறிப்பாக கதையின் மைய கதாபாத்திரத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்றே சொல்லலாம்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஜித் நன்றாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். நாயகனாக நடித்திருக்கும் ஆர் எஸ் கார்த்திக் காத்தவராயன் வேடம் கட்டி கூத்து கலைஞராக நடிக்கும் போது நடிப்பில் மிளிர்கிறார்.
படத்திற்கு செல்வ நம்பியின் பாடலும், பின்னணியிசையும் பக்க பலமாக இருக்கிறது. ஜெய்சங்கர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் ரசிகர்களை இருக்கையில் அமர செய்கிறது.
முதல் பாதி திரைக்கதையில் இருந்த சில சுவாரசியமான தருணங்கள்.. இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். உச்சகட்ட காட்சியை சோகத்தில் முடித்திருப்பது புரியாத புதிர்.
ஆர்யமாலா- கூத்து கலையின் உஜாலா.
மதிப்பீடு : 3/5