இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் ராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். அவரோ கர்ப்பிணி மனைவியை ராணுவத்தின்குண்டு வீச்சுக்கு பறி கொடுத்தவர்.
ஆனால் போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளை சக மனிதர்கள் சிலர் கேட்கும் அளவுக்கு அங்கே விரக்தி கொட்டிக் கிடக்கிறது.
போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி பணிய வைக்கின்றனர். ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடியை தொழிலாக செய்யத் தொடங்குகிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலை நாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு சங்கத்தைக் கட்டமைக்க நினைக்கிறார் புதியவன். ஆனால் அவரை கடத்தி ஆளும் அரசு சித்ரவதை செய்கிறது.
இப்படிப்பட்ட வாழ்க்கையில் இந்த மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களின் நிலை எப்படிப்பட்ட அலைக்கழிப்புகளில் சிக்குகிறது? சக மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியில் என்ன செய்கிறார்கள்? அங்கே உரிமைகளுக்கான போராட்டக் குரல் மொத்தமாக ஓய்ந்து போய் விட்டதா? என்பது நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைக்கும் திரைக்கதை.
ஈழத்தில் உருவான ‘மண்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புதியவன் ராசய்யா, எழுதி, இயக்கி, சுந்தரம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். தனி மனிதர்களையோ, தலைவர்களையோ, இலங்கை அரசையோ, ராணுவத்தையோ விமர்சிக்காமல் தனது நிலத்தின் தற்போதைய கள நிலவரத்தை உருவாக்கியிருக்கிறார். புலம்பெயர்ந்துபோய் இன்று செழுமையாக வாழும் இலங்கைத் தமிழர்களின் மீதான விமர்சனம் படத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. (மண் படத்திலும் இதையே செய்தார்) அதேநேரம், உரிமைக்கான குரலைக் கடைசி தமிழன் இருக்கும்வரை நசுக்கி விட முடியாது என்பதைச் சொன்ன கிளைமாக்சில் மட்டும் இயக்குநரின் துணிச்சல் சற்றே எட்டிப் பார்க்கிறது.
இலங்கையில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் மஹிந்தே அபிசிண்டே, இந்திய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் சி.ஜெ.ராஜ்குமார் இருவரும் கேமரா வழியே கதையை மனதுக்குள் கடத்தி விடுகிறார்கள்.
அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை வருடும் ரகம்.
இறுதி யுத்தத்திற்குப் பிறகு ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறேன் என்று தனது படைப்புக்கு நியாயம் சேர்க்கும் இயக்குநர் புதியவன் ராசையா, சில விசயங்களை நாகரீகம் கருதியாவது தவிர்த்திருக்கலாம்.