தமிழ்த் திரைக்கு எப்போதாவது இம்மாதிரியான கதைக்களம் சிறப்பு சேர்க்கும். அப்படியொரு படம் இது.
பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட நாயகனுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான்.
இந்த நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் நினைவு நாளையொட்டி 25 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடாகிறது. இந்த 25 பேரில் ஒருவனாக நமது நாயகனும் அழைக்கப்பட, போகிறான். அங்கே வயிறார சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு ஆசை. இந்த பங்களாவுக்குள் ஒரு முறையாவது போய் வந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. பல கட்டுப்பாடுகளை தாண்டி அந்த பங்களாவுக்குள் நுழைகிறான் நாயகன். அங்கே ஒரு நிஜ பேயையும் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் சில பணப்பேய் களையும் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நாயகன் அங்கிருந்து உயிரோடு திரும்பி வர முடிந்ததா என்பது திகு திகு திரைக்கதை.
நாயகனாக கவின் அந்த பிச்சைக்கார கேரக்டரில் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். யாசகம் கேட்பவர்களிடம் ஏளனம் பேசுவதில் தொடங்கி பங்களாவில் சிக்கி உயிர் பிழைக்க அவர் ஜீவ மரண போராட்டம் நடத்தும் கிளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் நடிகர் கவின் தெரியவில்லை என்பதுதான் அவர் நடிப்புச் சிறப்பு.
பங்களாவுக்குள் ஆவியாக வந்து கவினுக்கு உதவும் கேரக்டரில் ரெடின் கிங்ஸ்லி செய்திருப்பது காமெடி அட்டகாசம்.
கிளைமாக்சில் வந்தாலும் ராதாரவி தன் இருப்பை நிரூபித்து விடுகிறார். S
ஜென் மார்ட்டின் இசை அந்த திகில் பங்களாவை திரில் பங்களாவாக்கி விடுகிறது.
பங்களாவின் ஒவ்வொரு அறையையும் சுஜித் சாரங்கின் கேமரா பரபரப்புக்கு குறைவில்லாமல் படம் பிடித்திருக்கிறது.
படத்தின் அடிநாதமே பிச்சைக்காரனின் மனைவிக்கு நேர்ந்த எதிர்பாராத விபத்தும் உயிர்ப் பலியும் தான். அதை நெகிழும்
விதத்தில் நெஞ்சுக்கு நெருக்கமாக தந்த விதத்தில் இயக்குனர் சிவபாலன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரவாகி இருக்கிறார். அந்த விபத்தை ஏற்படுத்தியது யார் என்பதிலும் அந்த அனாதை சிறுவனின் பின்னணி என்ன என்பதிலும் இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் அடடா ரகம்.
பிற்பகுதி கதை ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவதை படத் தொகுப்பாளர் தவிர்த்திருக்கலாம்.