கங்குவா – திரைப்பட விமர்சனம்

முன்ஜென்ம கதையை தீவுவாசிகள் பின்னணி யில் சொல்லி இருக்கிறார்கள்.
2024 இல் நிகழ் காலத்தில் கதை தொடங்குகிறது.

 

போலீசால் கண்டுபிடிக்க முடியாத நபர்களை தனது தீவிர வேட்டையாடல் மூலம் கண்டுபிடித்து கொடுத்து அதற்கான அன்பளிப்பை காவல்துறையில் பெற்றுக்கொள்ளும் சூர்யா. அவருக்கு உதவியாக யோகி பாபு.
இதே வேலையை பிழைப்பாக நாயகி திஷா
பதானியும் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக ரெடின் கிங்ஸ்லி.
இதற்கிடையே ஆய்வுக் கூடம் ஒன்றில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் இருந்து அதிசய மூளைத் திறன் கொண்ட சிறுவன் ஒருவன் தப்பி விட, ஆய்வுக்கூடம் அனுப்பி வைத்த அடியாட்கள் சிறுவனை வெறியுடன் தேட, அவனுக்கோ சூர்யாவை பார்த்த மாத்திரத்தில் இன்ப அதிர்ச்சி. சூர்யாவும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கும் தனக்குமான இனம் புரியாத அன்யோன்யத்தை உணர்கிறார்.
ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட , அந்த சிறுவனை ஆய்வுக் கூட அடியாட்கள் தூக்கிப் போய்விடுகிறார்கள்.
சூர்யா அந்த சிறுவனை மீட்டாரா? அவருக்கும் சிறுவனுக்குமான பிணைப்பு எத்தகையது என்பது பிரமாண்டமும் அதிரடியுமான கதைக்களம்.
இந்த பாசப் பிணைப்பை விவரிக்கும் 1070 காலகட்ட
பிளாஷ்பேக்
காட்சிகள் தான் படத்தின் ஜீவன்.

நவயுக இளைஞன், ஆதிகாலத்திய இளவரசன் கங்குவா என இரு வேறு தோற்றங்களில் நடிகர் சூர்யா படம் முழுக்க நடிப்பால் நிரம்பி நிற்கிறார்.
கடலை சுற்றியுள்ள ஐந்து அழகான தீவுகளில் உண்டான பெருமாச்சி தீவின் இளவரசன் கங்குவா இப்படித்தான் இருந்திருப்பாரோ? தோற்றம் உடல் மொழி அதிரடி என சகலத்திலும் சபாஷ் சூர்யா. போர்க்களத்தில் உயிருக்கு பயப்படாத அந்த கண்கள், அதில் வெளிப்படும் ஆவேச நடிப்பில் நிஜமாகவே சூர்யபிரகாசம்.
மகனாக தத்து எடுத்துக் கொண்டவன் தன் உயிருக்கே உலை வைக்கப் பார்த்த நிலையிலும் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேலாண்மை நடிப்புக்கும் எடுத்துக்காட்டாகி விடுகிறது.

நாயகியாக திஷா பதானி வந்து போகிறார்.
பக்கத்து தீவு வில்ல அரசனாக பாபி தியோல். கிளைமாக்ஸ் கப்பல் சண்டையின் போது காட்டும் ஆவேசம் அடடா ரகம்.
கோவா போலீஸ் கமிஷனராக கே.எஸ்.ரவிக்குமார், நம்பிக்கை துரோக நாயகனாக நட்டி, தீவு வாசிகளாக கருணாஸ், போஸ் வெங்கட் கிடைத்த கொஞ்ச நேரத்திலும் நடிப்பில் கில்லி அடிக்கிறார்கள்.
வெற்றி பழனிசாமியின் கேமரா தீவுகளின் அழகை கண் முன் நிறுத்துகிறது. தேவி பிரசாத் இசையில் பல இடங்களில் ஓசையே பிரதானம்.
சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகள் குறிப்பாக போர்க்களக் காட்சிகள் மிரட்டல். கலை இயக்கம் தந்த மிலனின் உழைப்பு சிறப்பு.
எழுதி இயக்கிய சிவா, கதை உருவாக்கத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். உணர்வு பூர்வமான சில காட்சிகள் கூட மேலோட்டமாக வந்து போவது பலவீனம். என்றாலும் சூர்யா என்ற மேஜிக் படத்தை காப்பாற்றி கரை சேர்த்து விடுகிறது.

கங்குவா இந்த நூற் றாண்டின் பிரம்மாண்ட ஆச்சரியம்.

Related posts

Leave a Comment