பணி – திரை விமர்சனம்

மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்குனர் ஆகியிருக்கும் முதல் படம்.முதல் படத்திலேயே வெற்றி முத்திரை பதித்திருக்கிறார்.

மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள் திடீரென புதிய தொழிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆயுதம் ஏந்தி ஒரு கொலையை நடத்தி முடிக்கிறார்கள். அதற்காக கிடைக்கும் ரூ. பத்து லட்சம் அவர்களை வன்முறை பாதையில் தொடர வைக்கிறது. இதனால் ஏற்படும் புதிய துணிச்சலில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும் பிரபல தாதாவின் மனைவியை தைரியமாக சீண்டுகிறார்கள். இதில் ஆவேசமான தாதா இருவரையும் அடித்து துவைக்கிறார்.

இதனால் வெறியான இளம் கொலையாளிகள் இருவரும் தங்கள் பழி வாங்கும் படலத்தை தொடங்குகிறார்கள். தாதாவின் குடும்பத்தில் உள்ளவர்கள், தாத்தாவின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் கடத்தல், கொலை என விபரீதம் தொடர்கிறது.

இதற்கிடையே தாதாவின் மனைவி இவர்களிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகிறாள்.
இதன் பிறகு தாதா எடுக்கும் விஸ்வரூபம் அந்த இளைஞர்களை என்ன செய்தது என்பது விறு விறு திகு கிளைமாக்ஸ்.

இயக்குனர் ஜோஜூ ஜார்ஜே தாதா கேரக்டரிலும் வருகிறார். இரு வில்லங்க இளைஞர்களால் தங்கள் குடும்பத்துக்கு அடுத்தடுத்து வரும் இழப்பும் அதிர்ச்சியும் தாங்காமல் தவிக்கும் இடத்தில் நடிப்பில் டிஸ்டிங்ஷன்வாங்குகிறார்.

தோற்றப் பொலிவும் கம்பீரமும் அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறது.
அவரது அழகு மனைவியாக அபிநயா வசீகரிக்கிறார். இளைஞர்களால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதை ஜீரணிக்க முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பும் துடிப்பும் நெஞ்சுக்குள் அனல்.வில்லன்களாக சாகர் சூர்யா, ஜூனாப்ஸ் சர்வ சாதாரணமாக கொலைகளை கையாளும்போது மிரட்டி விடுகிறார்கள்.வில்லன்கள் சிக்கிக்கொண்ட பிறகு நிகழும் அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே எதிர்பாராதது.

நல்ல கதை மொழிகளை தாண்டி வெற்றி பெறும். அதற்கு இந்த பணி சிறந்த உதாரணம்.

Related posts

Leave a Comment