மாயன் – திரை விமர்சனம்

ஐடி துறையில் பணியாற்றும் வினோத் மோகன் அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரர். குறிப்பாக சகிப்புத்தன்மை மிக்கவர். அலுவலகத்தில் சிற்சில நேரங்களில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டாலும் அதை சிரித்த முகத்தோடு கடந்து போகிறவர். அவரது ஒரே லட்சியம் சொந்தமாய் ஒரு வீடு வாங்கி அதில் தனது அம்மாவை குடியமர்த்துவது தான்.

இந்நிலையில் நாயகனுக்கு வரும் மின்னஞ்சல் ஒன்றில், 13 நாட்களில் இந்த உலகம் அழியப்போகிறது மாயனின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். எக்காரணம் கொண்டும் இந்த தேவ ரகசியத்தை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என அதில் கண்டிஷனும் போடப்பட்டு இருக்கிறது.

முதலில் இதை வினோத் மோகன் நம்பவில்லை. ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவரை நம்ப வைக்கிறது. இதனால் எப்படியும் உலகம் அழியப்போகிற இந்த கொஞ்ச நாட்களுக்குள் எத்தனை மகிழ்ச்சியாக வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார். ஏற்கனவே காதலித்ததனது கம்பெனியின் நிர்வாகி மகளை உடனடியாக திருமணம் செய்து கொள்கிறார். அம்மாவுக்கு சொந்த வீடு, அவரது அதிரடி நடவடிக்கையில் அதுவும் சாத்தியமாகிறது.
ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அந்த 13 நாட்களில் உலகம் அழிந்ததா… அவருக்கு தகவல் சொன்ன மாயர்கள் யார் என்பதை மிரட்டலான கிராபிக்ஸ் உதவியோடு சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் வினோத் மோகன் திரைக்குப் புரியவர். ஆனால் நடிப்புக்கு புதியவர் என்பது எந்த இடத்திலும் தெரியவில்லை. அத்தனை யதார்த்தம். முகத்தை பாதி தாடி மறைத்துக் கொண்டாலும் அதற்குள் இருந்தும் அழகான நடிப்பை கொண்டு வந்து விடுகிறார்.

நாயகியாக வரும் பிந்து மாதவி படத்தில் வரும் நேரங்கள் குறைவு என்றாலும், நிறைவான நடிப்பில் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார்.

போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், வில்லன்களாக சாய் தீனா, ராஜசிம்மன் நிறைவு. அதிரடி பெண்மணியாக என்ட்ரி கொடுக்கும் ரஞ்சனா நாச்சியார் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பின்பு கஞ்சா கருப்பை பார்க்க முடிகிறது. நடிப்பை ரசிக்க முடிகிறது.

எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையில் காட்சிகள் திடும் திடும் என நெஞ்சுக்குள் தடம் பதிக்கின்றன. ஒளிப்பதிவாளர் கே. அருண் பிரசாத் ஒரு பக்கம் மிரட்டினால் கிராபிக்ஸ் நிபுணர்கள் காட்சி வடிவத்தில் இன்னொரு பக்கம் மிரட்டியிருக்கிறார்கள்.

ராஜேஷ் கண்ணா எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு சராசரி மனிதனின் ஆசைகள் அபிலாஷைகள் என்று ஆரம்பித்த கதை அப்புறமாய் மாயர்கள் உலகம், அவ்வப்போது நாயகனை துரத்தும் ராட்சத பாம்பு என்று கதை திசை மாறி போய் விடுகிறது. இருப்பினும் மிரட்டலான கிராபிக்ஸ் உபயத்தில் சுலபமாக கரையேறி விடுகிறார் இயக்குனர். அந்த 22 நிமிட கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் வேறொரு உலகத்துக்கு நம்மை கொண்டு போய் விடுவது நிஜம்.

Related posts

Leave a Comment