-கிட்னி பாதிப்பால் உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற ஆட்டோ டிரைவர் பரத் போராடுகிறார். கிட்னி வழங்க டோனர் கிடைத் தும் ஆப்ரேஷனுக்காக சில லட்சங்கள் புரட்டியாக வேண்டிய நிலை. இந்த நேரத்தில் அவருக்கு ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. பணத்துக்காக ஒரு உயிரைக் கொல்ல வேண்டிய அசைன்மென்ட் அந்த நேரத்தில் தேடி வர, பணத்துக்காக அந்த காரியத்தை செய்தாரா? மனைவியின் உயிரைக் காப்பாற்ற அவரால் முடிந்ததா?
-கணவன் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் வாரிசை வளர்க்க வேண்டிய கட்டாயம் துப்புரவு தொழிலாளி அபிராமிக்கு. சோதனையாக மகனாக வளர்ந்தவன் திருநங்கையாக மாறிய நிலையில் தன் ஒரே வாரிசை டாக்டர் ஆக்கி பார்க்கும் ஆவலில் வட்டிக்கு கடன் வாங்குகிறார். கடன் கொடுத்தவனோ சொன்ன தேதிக்குள் பணம் வராததால் அபிராமியின் வாரிசுக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான். இந்த நேரத்தில் அபிராமிக்கு ஒரு துப்பாக்கி கிடைக்க, அபிராமி அந்த கந்து வட்டிக் காரனை என்ன செய்கிறார்?
-படித்து முடித்து பெரிய வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியக் கனவில் இருக்கும் அஞ்சலி நாயருக்கு எதிர்பாராமல் திருமணம் கைகூடி வர, புகுந்த வீட்டில் இல்லத்தரசி ஆகிறார். மேற்கொண்டு படிப்பதோ வேலைக்கு போவதோ கூடாது என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டமாக இருக்க, இந்நிலையில் அஞ்சலி கர்ப்பமாகிறார். ஆனால் அந்த கர்ப் பத்துக்கு தன் கணவன் காரணம் அல்ல என்பது தெரிய வரும் நேரத்தில் அவர் கைவசமும் ஒரு துப்பாக்கி தானாக கிடைக்கிறது. தனக்கு நேர்ந்த சதிக்காக மாமியார் குடும்பத்தின் மீது அவரது கைவசம் இருந்த துப்பாக்கி நீட்டப்பட்டதா?
-சாதி வெறி பிடித்தவர் தலைவாசல் விஜய். அவர் மகள் பவித்ரா லட்சுமியோ வேறு ஜாதி இளைஞன் ஒருவரை காதலிக்கிறார். இந்நிலையில் தன்மகள் பதிவு திருமணத்துக்கே தயாராகி விட்டாள் என்பது மகன் மூலமாக தலைவாசல் விஜய்க்கு தெரிய வர, அதே நேரம் ஒரு இளைஞன் காரில் லிப்ட் கேட்டு அவர் காரில் வர… அவன் தான் தனது மகளை பதிவு திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்று கணிப்பவர், அவரது காரில் யாரோ போட்டு பண்ண துப்பாக்கி கண்ணில் பட, சாதி வெறிக்கு அந்த இளைஞனை பலியாக்கினாரா?
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பயணிக்கும் இந்த நான்கு கிளைக் கதைகளையும் தொடர்புபடுத்தும் அந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் என்னென்ன என்பதை அழகூட்டி சொல்லி இருக்கும் திரைக்கதை படத்தின் முதல் பிளஸ்.
நான்கு கதைகளிலும் முதல் இடத்தில் இருப்பது துப்புரவு தொழிலாளி அபிராமியின் கதை தான். அந்த கேரக்டரில் தன் ஆதங்கம், ஆவேசம், ஆக்ரோஷம் என அத்தனையையும் கொட்டி விடுகிறார் அபிராமி. மகனுக்கு நேர்ந்த கொடூரம் அறி ந்து அவர் துடிக்கும் இடம் நிஜமாகவே நெஞ்சுக்குள் அனல்.
உயிருக்கு போராடும் மனைவியை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகும் கேரக்டரில் பரத் அசத்தி விடுகிறார். மனைவி ஆபரேஷனுக்கு தேவையான ரூபாய் 15 லட்சம் கண் முன் இருக்க, இந்த பணம் எனக்கு இப்போது அவசியம் என்று எதிராளியிடம் திடீரென குரல் உயர்த்தும் அந்த இடம் ஆஸம்.
சிக்கிக் கொண்டது புலிக் குகையாக இருந்தாலும் சிங்கமாய் சீறிப்பாய்ந்து அசுர வேட்டையாடும் அஞ்சலி நாயருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்.அபிராமியின் ஆத்மார்த்த தோழனாக வரும் ராஜாஜி தனது நடிப்பால் அந்த கேரக்டருக்கு புது ஜீவன் கொடுத்திருக்கிறார்.
கௌரவ தோற்றம் என்றாலும் கனிகா தன் இருப்பை நிரூபித்து விடுகிறார்.சாதி வெறியில் தான் நடத்திய விபரீதம் உணர்ந்து துடிக்கும் இடத்தில் தலைவாசல் விஜய் தொட்டிருப்பது நடிப்பின் பொது எல்லைக்கோடு.
கல்கி, ஜெகன் கவிராஜ், அருள் டி சங்கர், ஷான், பி. ஜி. எஸ். பொருத்தமான பாத்திர தேர்வுகள். இதில் குறிப்பாக கந்து வட்டிக்காரராக வரும் பிஜிஎஸ், அவரது அடியாளாக வரும் ஜெகன் கவிராஜ் கூடுதலாக நடிப்பில் தடம் பதிக்கிறார்கள்.
ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இரண்டு பாடல்கள் சுகராகம். பின்னணி இசையிலும் முன்னணியில் இருக்கிறார்.சாதி பாகுபாடு, பெண்ணியம், மாற்று பாலினத்தோரின் உணர்வு, கம்யூனிசம், அய்யா வழியில் ஒரு அறவழி என அனைத்து ஏரியாக்களிலும் தனது கூர்மையான வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நம்பிக்கை நல் வரவாகி இருக்கிறார், ஜெகன் கவிராஜ்.
நான்கு கதைகளின் பயணத்தில் துப்பாக்கி கிடைத்து அதன் மூலம் ஏற்படும் அதிரடி
திருப்பங்களை ரசிகர்களின் விருப்பமாக்கிய விதத்தில் முதல் பட இயக்கத்திலேயே வெற்றி வாகை சூடி விடுகிறார் இயக்குனர் பிரசாத் முருகன்.
முதல் தயாரிப்பிலேயே ஒரு நல்ல கதையோடு திரைக்கு வந்துள்ள சினிமா மக்கள் தொடர்பாளர் எம்.பி. ஆனந்த்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.