அந்த நாள் – திரை விமர்சனம்

திரைப்பட இயக்குனரான ஆர்யன் ஷியாம் தனது புதிய படத்தின் டிஸ்கஷனுக்காக இரண்டு பெண் உதவி இயக்குனர்கள் உட்பட நாலு பேர் கொண்ட குழுவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா செல்கிறார். இரவில் அந்த பங்களாவில் சில மர்மமான சம்பவங்கள் நடக்க, திகிலில் உறைந்து போகிறது படக்குழு. உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அங்கிருந்து அவர்கள் தப்பிக்க முயல, ஆனால் அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை. இந்நிலையில் பங்களாவுக்குள்ளேயே மர்ம மனிதர் ஒருவர் வந்து ஆயுதத்தால் அவர்களை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது தான் அதற்கு முந்தின நாள் வந்து தங்கிய ஒரு குடும்பம் இந்த மர்ம மனிதனால் கொல்லப்பட்ட விஷயம் தெரிய வர, இவர்கள் நிலை என்ன ஆகிறது? அமானுஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து அவர்கள் தப்பினார்களா? அல்லது உயிர் விட்டார்களா என்பது விறுவிறு பரபர திகில்மய திரைக்கதை.

கதாபாத்திரம் ஒன்று தான். அதில் முதல் பாதியில் ஒரு விதமாகவும் மறு பாதி யில் இன்னொரு விதமாகவும் இரு வேறு முக பாவங்களை காட்டக்கூடிய கேரக்டரில் ஆர்யன் ஷியாம் நடிப்பில் அதகளப்படுத்துகிறார். அறிமுக நடிகரா இவர் என்ற கேள்வி நமக்குள் ஆச்சரிய அலைகளை எழுப்புகிறது. ஆஜானு பாகுவான தோற்றத்தில் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதோடு, எதிர்பாராத கோணத்தில் ஆக்ஷன் நாயகனாகவும் அதிரடிக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த ஒரு நடிகர் கிடைத்து விட்டார் என்ற சந்தோஷம் நமக்கு.

நாயகிகள் ஆத்யா பிரசாத். லிமா பாபு இருவருமே அந்த உதவி இயக்குனர் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.உதவி இயக்குனர் கிஷோர் ராஜ்குமார், உதவியாளராக இமான் அண்ணாச்சி கதையின் கலகலப்புக்கு உரிய பங்களிப்பு செய்து இருக்கிறார்கள்.

இந்த திகில் கதைக்கு என். எஸ். ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை மேலும் திகில் ஊட்டுகிறது.படம் முழுக்க இரவு நேர காட்சிகள் என்பதால் ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேலின் கேமரா திகில் காட்சிகளில் பயத்தில் பிகில் ஊத வைக்கிறது.

நரபலியை மையமாக வைத்து நாயகன் ஆரியன் ஷியாம், இயக்குனர் வி.வி.கதிரேசன் இணைந்து எழுதி இருக்கும் இந்த கதை, கடைசி வரை வேகம் குறையாமல் திகிலோடும் அடுத்து என்னாகுமோ என்ற பயத்தோடும் ரசிகனை கட்டுக்குள் வைத்திருப்பது தான் இந்த கதைக்கான சிறப்பு.

அந்த எதிர்பாராத கிளைமாக்சில் நாயகன் யார் என்று உண்மை தெரிய வரும் இடத்தில் இயக்கத்தில் சொல்லி கில்லி அடிக்கிறார் வி.வி.கதிரேசன்.

அந்த நாள்,  திகில் மசாலா.

Related posts

Leave a Comment