சூது கவ்வும் 2  -திரை விமர்சனம்

 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், பத்து ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்துக்கு வந்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தின் இறுதியில் அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்கு பதிலாக மகன் கருணாகரன் அரசியலுக்குள் வருவார். அதனால் இந்த இரண்டாம் பாகத்தை அவரிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு குருவான மிர்சி சிவா சிறையில் இருந்து வெளிவந்து தன்னுடைய கற்பனை காதலி சாவுக்கு காரணமான கருணாகரனை பழி  வாங்க துடிக்கிறார். அதே நேரம் அவரை பிடிக்க காவல்துறை அதிகாரி யோக் ஜேபி தருணம் பார்த்து காத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் தனது கட்சி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக வேண்டிய நேரத்தில் மயங்கி விழுந்து கோமாவுக்கு போன வாகை சந்திரசேகர் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கண் விழிக்கிறார். அப்போது அரசியல் நிலவரம் அவருக்கு சொல்லப்படுகிறது. தனது கட்சிக்குள் இருந்த ஊழல்வாதி ராதாரவி தான் இப்போதைய முதலமைச்சர் என்று அவருக்கு தெரிய வர, அதிர்ந்து போகிறார். இதனால் தனது பிரதான சீடர் எம்.எஸ். பாஸ்கரின் உதவியுடன் புதிய கட்சி தொடங்குகிறார். அப்போது தேர்தல் என்பதால் ராதாரவிக்கு எதிராக தனது கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இந்த நேரத்தில் வாக்காளர்களுக்கு செல்போனில் பணம் போட தயார் நிலையில் இருந்த நிதியமைச்சர் கருணாகரன்,  சில சிக்கல் காரணமாக பணம் போட முடியாத நிலை. இந்த நேரத்தில் ஆட்சியும் கவிழ்ந்து போக, தேர்தலில் வாகை சந்திரசேகரின் அணி வென்றதா? அல்லது ஆளுங்கட்சியின் ஊழல் பேர்வழிகளே ஆட்சியை பிடித்தார்களா என்பதை நகைச்சுவை பின்னணியில் சொல்ல முயன்று இருக்கிறார்கள்.
மிர்சி சிவா தனக்கே உரிய காமெடி ஸ்டைலில் படம் முழுக்க வருகிறார். கற்பனை காதலியுடனான அவரது அலம்பல் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்வை தருகிறது.

கற்பனை காதலியாக ஹரிஷா ஜஸ்டின் வருகிறார். காதல் காட்சிகளில் கவர்கிறார்.
நிதியமைச்சராக வரும் கருணாகரன்,  மிர்சி சிவா குழுவினரால் கடத்தப்பட்ட பிறகு அவரது நடிப்பு  வேறுலெவல் ஆகி விடுகிறது. நேர்மையானஅரசியல் தலைவராக நீண்ட இடைவெளிக்கு பிறகு வாகை சந்திரசேகர். வரவேற்கலாம். நேற்றைய அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கும் அந்த நடிப்புக்கு ஒரு ராயல் சல்யூட்.   மெர்சி சிவா கூட்டணியில் அருள்தாசுக்கு நடிப்பில் தனியிடம்.

கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவு இந்த கலகலப்பான படத்துக்கு கூடுதல் வளம் சேர்த்திருக்கிறது. எட்வின் லூயிஸ்  விஸ்வநாத்- ஹரி எஸ்.ஆர். இசையில் ஈர்ப்பு அதிகம்.
முதல் பாகத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டே இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார்,  எஸ்.ஜே.அர்ஜுன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக சுவாரசியம் கூட்ட வேண்டும் என்று நினைத்து காட்சிகளை அமைத்திருக்கிறார். இதில் காமெடியை விட கடி அதிகம்  என்றாலும் அதிகபட்ச நகைச்சுவை அவரை காப்பாற்றி விடுகிறது.

Related posts

Leave a Comment