ராஜா கிளி – திரை விமர்சனம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வரும் சமுத்திரக்கனி, ஒரு நாள் குப்பையில் கிடைப்பதை எடுத்து பசியாறும் பெரியவர் ஒருவரை பார்க்கிறார். அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். ஒரு நாள்அவர் வசம் இருந்த டைரியை படித்து பார்த்த போது உண்மையிலேயே அவர் பிச்சைக்காரர் அல்ல.கோடீஸ்வரனான பிரபல தொழிலதிபர் முருகப்பன் என்பது தெரிய வர, அதிர்ந்து போகிறார் சமுத்திரக்கனி. கோடிகளை குவித்த அவர் ஏன் இந்த கடை நிலைக்கு வந்தார்? என்பதை சொல்வதே இந்த ராஜாகிளி.

மனம் நலம் பாதிக்கப்பட்டவராக அந்த கேரக்டரில் தம்பி ராமையா பார்க்கும்போதே மனதுக்குள் பரிதாபம் எட்டிப் பார்த்து விடுகிறது. இதே தம்பி ராமையா செல்வந்தர் முருகப்பனாக வரும் காட்சிகளில் நடிப்பில் ஏகப்பட்ட வித்தியாசம். நடை உடை பாவனை என அனைத்திலும் செல்வந்தருக்கான கெத்து அச்சு பிசகாமல் வெளிப்படுகிறது. பெண்கள் மீதான மோகத்தின் போது இன்னொரு தம்பி ராமையாவை நடிப்பில் காண முடிகிறது.

சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும் முருகப்பன் யார் என்பதை பார்வையாளருக்கு விவரித்து இறுதியில் அவருக்காக குரல் கொடுக்கும் மாமனிதராக மனதில் பதிந்து விடுகிறார்.

தம்பி ராமையா மனைவியாக நடிப்பில் ஜொலிக்கிறார் தீபா. கணவரின் வளர்ச்சியில் அத்தனை மகிழ்ச்சி கொள்பவர் சந்தேகம் வந்த வந்த பிறகு பண்ணும் அத்தனை அமளி துமளிகளும் அம்மணியின் நடிப்பில் அட்டகாசமாய் வெளிப்படுகின்றன.தம்பி ராமையாவும் இரண்டாவது மனைவியாக வரும் சுபா. காதலியாக வரும் ஸ்வேதா பாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக அருள்தாஸ் அந்த மீட்டர் தண்டாத நடிப்பில் பிரகாசிக்கிறார்.
பாடல்களுக்கு தம்பி ராமையாவே இசை அமைத்திருப்பது இனிய ஆச்சரியம். பாடல்கள் கேட்கும் படி அமைந்திருப்பது அடுத்த கட்ட ஆச்சரியம். பின்னணி இசையை சிறப்பாக கையாண்டுஇருக் கிறார், சாய் கணேஷ். கேதார்நாத்- கோபிநாத் கேமராக்கள் யதார்த்த பதிவில் காட்சிகளை அழகாக்குகின்றன.

வெற்றி பெற்ற பிரபலங்களின் வாழ்க்கையில் இல்லத்தரசிகளின் சந்தேகம் எந்த மாதிரியான எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும் என்பதை திரைக்கதையாக உருவாக்கிய விதத்திலும் தம்பி ராமையா முன்னிற்கிறார்.

சபலம் என்பது எப்பேர்ப்பட்ட மனிதனையும் சறுக்க வைத்து வேடிக்கை பார்க்கும்.. பெண்களின் அவசர பத்தி எப்படி புனிதர்களை எப்படி குற்றவாளி கூண்டில் ஏற்றும் என்பதை தொடக்கம் முதல் முடிவு வரை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் உமாபதி ராமையா தனது முதல் இயக்கத்திலேயே ரசிகர்களின் இயக்குனராகி விடுகிறார். அப்படியே சந்தேகத்தில் தங்கள்வாழ்வை தொலைக்கும் பெண்களுக்கும் கிளாஸ் எடுத்திருக்கிறார்.
ராஜா கிளி,  ராஜ மகுடம்.

Related posts

Leave a Comment