மெட்ராஸ் காரன்- திரை விமர்சனம்

விடிந்தால் கல்யாணம். ஆனால் முந்தின இரவு மாப்பிள்ளை ஒரு கொலை குற்றத்தில் மாட்டிக்கொண்டால்…

சென்னையில் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் நாயகன் தனது காதல் திருமணத்தை புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த விரும்புகிறான் அதற்கான வேலைகள் நடந்து விடிந்தால் கல்யாணம் என்கிற சூழலில், ஹோட்டலில் தங்கி இருக்கும் தனது நாளைய மனைவி அழைப்பின் பேரில் அங்கே காரில் போகிறான். போகும் வழியில் நாயகனின் கார் ஒரு கர்ப்பிணி பெண்ணின் மீது மோத, அதனால் அந்த ஊர் மக்களின் ஆவேசம், போலீசில் புகார் என்று அந்த ராத்திரி நாயகனின் வாழ்வை ரணகளமாக்க…

திருமணம் நடந்ததா அல்லது அந்த பிரச்சனை நாயகனை ஜெயிலுக்கு அனுப்பியதா? என்பது விறுவிறுப்பான அதே நேரம் எதிர்பார்ப்புக்குரிய திரைக்களம்.

மலையாளத் திரை உலகில் புகழ் பெற்ற நாயகனாக வழங்கும் ஷேன் நிகம் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். வசன உச்சரிப்புகளில் ஆங்காங்கே மலையாளம் பேசுகிறது. ஆனாலும் நடிப்பில் தனது கேரக்டரை முழுமையாக செய்து இருக்கிறார். காதலியுடன் ரொமான்ஸ், பெற்றோருடன் பாசப் பிணைப்பு என்று தொடக்கம் முதலே தனது கேரக்டருக்கு நியாயம் செய்பவர், கார் விபத்துக்கு பின்பு முற்றிலும் மாறுபட்ட இன்னொரு நடிப்பில் தனித்து தெரிகிறார்.

நாயகியாக வரும் நிஹாரிகா, படத்தில் வரும் நேரம் குறைவு என்றாலும் நிறைவாகவே செய்திருக்கிறார். நாயகனுடனான அந்த காதல் மொழி, கூடுதல் சிறப்புமுக்கிய கேரக்டரில் கலையரசன் விசேஷ கவனம் பெறுகிறார். தன் மனைவியின் கரு கலைந்து போனபின் அவரது ஆவேசம் பிற்பகுதி படம் முழுக்க தாங்கி பிடிக்கிறது.

கலையரசனின் மனைவியாக ஐஸ்வர்யா தாத்தா. படங்களில் இதுவரை வந்து போய்க் கொண்டிருந்தவர் இந்த படத்தில் நமக்கு தருவது இன்ப அதிர்ச்சி. இனி குழந்தை வேண்டாம் என்று கணவனிடம் அவர் சொல்லும் அந்த ஒரு காட்சி கூட அவர் நடிப்புக்கு சாட்சி.
நாயகனின் பெற்றோராக பாண்டியராஜன் கீதா கைலாசம், தாய் மாமா வாக கருணாஸ் பாசமிகு பாத்திரப் படைப்புகள்.பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவும் சாம் சி. எஸ்.சின் இசையும் கதையோடு இணைந்த அழகு கலவைகள். எழுதி இயக்கி இருக்கிறார், வாலி மோகன்தாஸ். கல்யாணத்தில் ஆரம்பித்து அடிதடி ரகளை என்று நீடித்து
படத்தை பரபரப்பு களமாக்கி ரசிக்க வைப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த மெட்ராஸ்காரன், மொத்த தமிழகத்துக்குமானவன்.

Related posts

Leave a Comment