நேசிப்பாயா – திரை விமர்சனம்

வெறுத்து ஒதுக்கிய நாயகி இப்போது வெளிநாட்டில் நல்ல வேலையில். புதிய வாழ்க்கைக்குள் அவள் பழசை அடியோடு மறந்திட்ட நேரத்தில் அவளுக்கு கிடைக்கிறது கொலைகாரி பட்டம். வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி மகனையே அவள் கொன்றதாக குற்றச்சாட்டு. அதுவும் போதிய சான்றுகளுடன்.
சட்டத்துக்கு இது போதாதா? கைதாகிறாள்.
கொடும் சிறைவாசம்.
முன்னாள் காதலியை கொலையாளியாக தொலைக்காட்சியில் பார்த்த நாயகன், காதலியை மீட்க அந்த நாட்டுக்கே போகிறான். கொலைப் பழியில் இருந்து அவளை மீட்க முடிந்ததா? முன்னாள் காதலி அவன் வருகையை எப்படி எடுத்துக்கொண்டாள்?
என்பது பரபரப்பான திரைக்கதை.
காதலுடனே தொடங்குகிறது, கதை.
பார்த்த மாத்திரத்தில் காதல் சொல்லும் இளைஞனை தவிர்க்கப் பார்க்கிறார் அந்தப் பெண். ஒரு கட்டத்தில் அந்த காதலை ஏற்றுக் கொள்பவர், போகப் போக தனது முன்னேற்றத்திற்கு தடையாக காதலனின் நடவடிக்கைகள் இருப்பதாக நினைக்கிறாள் நாயகி, அந்தக் கோபத்தில் காதல் பிரேக் அப் ஆகிறது. அப்படியே வெளிநாட்டில் கிடைத்த வேலையிலும் செட்டில் ஆகிறார்.
சோதனை
யாக அவர் பணியில் இருக்கும் நிறுவனத்தின் முதலாளி மகன் கொலையாகிறார். இந்த கொலைப் பழி நாயகி மீது விழ, அவர் கைதாகிறார். இது தெரிந்த நாயகன் தனது முன்னாள் காதலிக்காக அவள் இருக்கும் நாட்டுக்கே சென்று மீட்க போராடுகிறான். அப்போது அந்த தொழில் அதிபர் மகன் கொலையில் பல மர்மங்கள் இருப்பதை தெரிந்து கொண்டவன் அதை வெளியர ங்கமாக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்கிறான்.
இதை தெரிந்து கொண்ட செல்வாக்கு மிக்க அந்த தொழிலதிபர் குடும்பம் நாயகனின் உயிருக்கு உலை வைக்க முயல… அதைத் தாண்டி சட்டபூர்வமாக
காதலியின் உயிரை மீட்க நாயகனால் முடிந்ததா என்பது விறுவிறுப்புடன் கூடிய கிளைமாக்ஸ்.
நாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ். அறிமுக நடிகர் என்ற தடுமாற்றம்
கொஞ்சமுமின்றி நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்அதிதி சங்கரை பார்த்ததும் காதல் வயப்படுவதில் தொடங்கி அந்தக் காதல் முடிவுக்கு வரும் இடம் வரை அந்த கேரக்டரை அவர் கையாண்டிருப்பது தனி அழகு. முன்னாள் காதலி ஆகிவிட்ட போதிலும் காதலியின் உயிரை மீட்க போர்ச்சுக்கல் பயணப்படும் இடம் தொடங்கி அங்கு எதிரிகளை மேற்கொள்ளும் இடங்கள் வரை அதிரடி ரகம். ஜெயிலில் முதலில் தன்னை பார்க்க மறுத்த காதலி, பின்னொரு நாளில் அதே ஜெயிலில் அன்பை கொட்டும் இடத்தில் ஆகாஷின் மொத்த உடம்பும் நடிக் கிறது.
நாயகியாக அதிதி சங்கர். தன்னைத் துரத்தி துரத்தி காதலித்த காதலனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும்
பின்னாளில் தன் கேரியருக்கு முட்டுக்கட்டை போடுவதை உணர்ந்து கொந்தளிக்கும் இடத்தில் தொடங்கி, காதலனின் அன்பை உணரத் தொடங்கும் இறுதிக்காட்சி வரை நடிப்பில் அசத்தி இருக்கிறார் அதிதி.
பணக்கார தொழிலதிபர் ஜோடிகளாக சரத்குமார்- குஷ்பூ. சரத்குமார் அடக்கி வாசிக்க, அதற்கு வட்டியும் முதலுமாக பொங்கி எழுகிறார் குஷ்பூ.
அவர்கள் கம்பெனியின் மேலாளராக ‘வேதம் புதிது’ நாயகன் ராஜா. வாங்க ராஜா வாங்க.
அதிதி சங்கரை காப்பாற்ற போராடும் வழக்கறிஞராக கல்கி கோச்சலின் இயல்பாக வந்து போகிறார். ஆகாஷின் ஒவ்வொரு அதிரடி முயற்சியையும் அவர் அதிகப் பிரசங்கி த்தனமாக எடுத்துக் கொள்ளும்
காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பை ரசிக்க முடிகிறது.
போர்ச்சுக்கல் நாட்டை அழகுற காட்டியிருக்கிறது, கேமரூன் எரிக் பிரிசனின் கேமரா. யுவனின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம்..
காதல் முறிந்த பின்பும் காதலன் வாயிலாக அது எடுக்கும் விஸ்வரூபம் எத்தகையதாக இருக்கும் என்பதை காட்சிகளாக்கிய
விதத்தில் காதலுக்கு புது மரியாதை செய்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
நேசிப்பாயா? — நேசிக்கலாம், அதிகமாகவே.

Related posts

Leave a Comment