நாயகன் மணிகண்டனும் நாயகி ஷான்வியும் காதலர்கள். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப, ஒரு கட்டத்தில் காதல் ஜோடிகள் ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
சம்பாதிக்கும் மகனை பகைத்துக் கொள்ள விரும்பாத நாயகனின் பெற்றோர் ஒரு வழியாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் தங்கள் வீட்டில் இருக்கும் மருமகளை நாசூக்காக அவ்வப்போதுமாமியார் இடித்துரைப்பதும் நடக்கிறது. திருமணம் ஆகி குடும்பஸ்தன் ஆகிவிட்டபோதிலும் பெற்றோரையும் கவனிக்கும் நிலையில் இருக்கிறார் மணிகண்டன். அப்பாவுக்கு பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. அம்மாவுக்குa ஆன்மீக டூர் போக வேண்டும். இது போக திருமணமாகிவிட்ட அக்காவுக்கும் சில தேவைகள். இதனால் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார் மணிகண்டன்.
மகிழ்ச்சியான இல் வாழ்க்கையில் கர்ப்பமாகிறாள் மனைவி. இப்போது மருத்துவ பரிசோதனை, பிரசவ செலவு என்று கூடுதல் பணத் தேவைகள் கண்முன் நிற்கிறது.
இந்த நிலையில் எதிர்பாராத ஒரு சூழலில் நாயகனுக்கு வேலை போகிறது. வேலை போனது குடும்பத்துக்கு தெரிந்தால் மொத்த குடும்பமும் மனதளவில் உடைந்து விடும் என்பதால் தனக்கு வேலை போனதை வீட்டில் உள்ளவர்களிடம் மறைக்கிறார். இதனால் குடும்ப தேவைகளுக்காக வட்டிக்கு பணம் வாங்கும் மணிகண்டன், வேலை போனது வீட்டிற்கு தெரிவதற்குள் வேறு வேலை தேடும் முனைப்பிலும் இருக்கிறார். இருப்பினும் ஒரு கட்டத்தில் வேலை போனது குடும்பத்துக்கு தெரிய வர, அதனால் ஏற்பட்ட அமளி
துமளிகளை சரி செய்து குடும்பத்தினரை சமாளித்தாரா… வேறு வேலை கிடைத்ததா என்பதை சிரிப்பும் சீரியசுமாக சொல்லி இருக்கிறார்கள்.
கதையின் ஆணிவேரே பொருத்தமான பாத்திரத் தேர்வுகள் தான். அதிலும் நாயகன் மணிகண்டன் இந்தக் கதைக்கு சாலப் பொருத்தம். வேலை போன பின் பாத்ரூமில் தனியாக இருந்து தனக்குத்தானே பேசும் இடத்திலும், மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் தன்னிலை விளக்கம் அளிக்கும் இடங்களிலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார். மனைவியிடமான செல்ல சண்டைகளிலு ம் நடிப்பு தெறிக்கிறது. எதிர்பார்த்த வேலை கிடைக்காத நிலையில் கடன்காரர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாக அவர் படும் பாட்டுக்கு
யதார்த்த நாயகன் பட்டமே கொடுக்கலாம். மணிகண்டனின் மனைவியாக சான்வி மேக்னா அந்த கேரக்டரில் புகுந்து விளையாடி இருக்கிறார். மாமியார் தன்னை வார்த்தைகளால் இடிக்கும் போதெல்லாம் சுடச்சுட பதிலடி கொடுக்கும் இடங்கள் இவரது நடிப்பில் ‘அடடா ஆகா’ ரகம். கணவருடனான இவரது ஊடல் கூடல் காட்சிகள் அத்தனை அழகு. அத்தனையும் அழகு. வேறு சாதிப் பெண் என்று கிண்டல் அடிக்கும் உறவுகளை இவர் கையாளுவது இன்னொரு வித அழகு.
படத்தில் முக்கியமான பங்கு மணிகண்டனின் அக்கா கணவராக வரும் குரு சோமசுந்தரத்துக்கு. மனைவி குடும்பத்தை விட தன் தன்னை அவர் உயர்வாக காட்டிக் கொள்ளும் இடங்கள் எல்லாம் மமதைக்கு மமதை சேர்க்கும் காட்சிகள். மைத்துனருக்கு வேலை இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தும் இடத்தில் முகத்தில் புன் முறுவலுடன் வெளிப் படும் அந்த குரூரம் ‘இவன் நடிகன்டா’ சொல்ல வைக்கிறது.
இவரது மனைவியாக நிவேதிதா ராஜப்பன் கணவரை உள்ளுற வெறுக்கும் இடங்களில் நடிப்பில் தனித்து தெரிகிறார். பெற்றோரின் அறுபதாம் திருமண தினத்தில் கணவரை டைவர்ஸ் செய்யப் போகிறேன் என்று அம்மாவுக்கு ஷாக் கொடுக்கும் இடம் இவரது நடிப்புக்கான இன்னொரு சோற்று பதம். நாயகனின் அப்பாவாக ஆர். சுந்தர்ராஜன், அம்மாவாக கனகம் தங்கள் கேரக்டர்களில்
‘பளிச். ‘
சிரிப்புக்காகவே பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் கூட்டணி.
கனமான கதைக்குள் கலகலப்பையும் இணைத்து திரைக்கதை தந்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சமீபத்திய நல்வரவு. சுஜித் சுப்பிரமணியனின் கேமராவும் வைசாக்கின் இசையும் படத்தின் இன்ன பிற பக்கத் தூண்கள்.
ஒரு கனமான குடும்பக் கதைக்குள் சிரிக்க சிரிக்க காட்சி அமைப்பது, அதற்கு அந்த கதையும் ஒத்துழைப்பது தமிழ் சினிமாவில் எப்போதாவது நிகழும் மேஜிக். அந்த மேஜிக்கை தனது இயக்கத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்த்தி காட்டி இருக்கிறார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி.
-குடும்பஸ்தன் மகுடம் தரிப்பான்.