பயணத்தில் மனைவியை தொலைத்த கணவன் அவளைத் தேடும் அபாய படலமே இந்த விடாமுயற்சி.அதில் நாயகனுக்கு வெற்றி கிடைத்ததா என்பதை பரபரப்புடன் காட்சிப் படுத்தியிருக்கும் படம்.
அஜர்பைஜான் நாட்டில் காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் அஜித். இனிய இல்லறத்தில் தாய்மை அடைகிறார் திரிஷா. ஆனால் எதிர்பாராத விபத்தொன்றில் குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்து விட, திரிஷா மட்டும் உயிர் பிழைக்கிறார்.
ஆனால் இந்த விபத்து அவருக்கு மறுபடியும் பிள்ளைப் பேற்றுக்கான வாய்ப்பை அடியோடு தகர்த்து விட, அப்போது முதலே தம்பதிகளுக்குள் சில்லறை பேதங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்குகிறது. 12 வருடத்தில் அதுவே பூதாகரமாக வளர்ந்து திரிஷா விவாகரத்து கேட்பதில் போய் நிற்கிறது
அதுவரை ஊரில் உள்ள பெற்றோருடன் இருந்து கொள்கிறேன் என்றும் சொல்கிறார்.
மனைவியின் முடிவு அதிர்ச்சி தந்தாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல் காரில் திரிஷாவின் பெற்றோர் இருக்கும் ஊருக்கு அழைத்துச் செல்கிறார் அஜித். போகும் வழியில் பிரேக் டவுன் ஆகிவிட, அப்போது அங்கே ட்ரக்கில் வரும் அர்ஜுன்- ரெஜினா தம்பதிகள் அஜித்திடம், ‘இது பாதுகாப்பான இடமில்லை என்பதால் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள காபி ஷாப் ஒன்றில் திரிஷாவை பாதுகாப்பாக தங்க வைப்பதாகவும், கார் ர சரி செய்த பிறகு அங்கு போய் அழைத்துக் கொள்ளுங்கள்’ எனவும் சொல்ல…அஜித்தும் அதை நம்பி திரிஷாவை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்.
அவர்கள் போன சிறிது நேரத்தில் கார் சரியாக, கொஞ்ச தூர பயணத்தில் அந்த காபி ஷாப்பை கண்டு பிடிக்கிறார். ஆனால் அங்கே திரிஷா இல்லை. வந்தாரா வரவில்லையா என்பதையும் மொழி பிரச்சனையால் அவரால் உடனடியாக அறிந்து கொள்ள முடியாமல் போக…ஒருவழியாக திரிஷா கடத்தப்பட்டு இருப்பது உறுதியானபோது, தன் மனைவியை மீட்க அஜித் ஆடும் அதிரி புதிரி ஆட்டமே மீதிக் கதை.
அஜித் படம் என்றாலே ஆக்ஷன் தூள் பறக்கும். ஆனால் இந்த படத்தில் கதை என்ன கேட்கிறதோ அதை தனது நடிப்பில் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார். மனைவி விவாகரத்து பற்றி முடிவெடுத்த நிலையில் அதை ஏற்க இயலாத மனநிலையை நடிப்பில் வெகு இயல்பாக கொண்டு வருகிறார்.கொலைக்கு அஞ்சாத எதிரிகளின் கூடாரத்தில் மனைவியை தேடி அவர் பயணப்படும் கிளைமாக்ஸ் காட்சி வரை நடிப்பில் அவர் எடுத்திருப்பது விஸ்வரூபம். அஜர்பை ஜான் போலீசிடம் தன் மனைவியை கடத்தியது அர்ஜுன் தான் என்பதை மொழி புரியாத நிலையிலும் விளக்கி சொல்ல போராடும் இடம் அவர் நடிப்பின் உச்சம். இளமைக்கால அஜித் வரும் இடங்கள் அழகு.
அஜித்தின் மனைவி கேரக்டரில் திரிஷா.வின் ஆரம்ப கால காதல் நாட்களில் கணவரின் அன்பை கொண்டாடுவது கணவரை பிரிய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு இன்னொரு முகம் காட்டுவது என நடிப்பின் இரு வேறு நிலைகளிலும் அனுபவ நடிப்பை அள்ளிக் கொட்டுகிறார்.
பிரதான வில்லனாக அர்ஜுன் நடிப்பில் மிரட்டுகிறார். திரிஷாவை கடத்தி விட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அந்த ஊர் போலீசை அவர் நம்ப வைக்கும் இடத்தில் நடிப்பில் வில்லாதி வில்லன்.அவரது மனைவியாக வரும் ரெஜினாவுக்கு வில்லி முகம் புதுசு. அழகான வில்லியாக நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.
அர்ஜுனனின் அடியாட் களில் ஆரவ் கவனிக்க வைக்கிறார். அனிருத்தின் பின்னணி இசையில் காட்சிகள் தடதடக்கின்றன. அஜர்பைஜானின்புழுதிப் புயல் வரை காட்டி கண்களுக்கு நெருக்கமாகி விடு கிறது ஓம் பிரகாஷின் கேமரா.கணவன் மனைவி இல்லறபேதத்தில் தொடங்கி, கடத்தல், அதன்பின்னான நாயகனின் போராட்டம் வரை நேர்கோட்டில் சொன்ன விதத்தில் தேர்ந்த கதை சொல்லியாக ஜெயித்திருக்கிறார் இயக்கிய மகிழ் திருமேனி. இடைவேளை ட்விஸ்ட்டும் கிளைமாக்ஸ் திருப்பமு ம் எதிர்பாராதது.
-விடாமுயற்சி, வெற்றியின் விலாசம்.