கார்த்திக்-மோனிகா 2கே இளைஞர்கள். சிறு வயது முதலே நண்பர்கள். இருவரும் இணைந்து ப்ரி வெட்டிங் போட்டோ சூட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களிடையே நீடிக்கும் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறும் என்று நண்பர்கள் வட்டாரம் எதிர்பார்த்து இருக்க ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இவர்கள் நட்பிலேயே நிலைத்து நிற்கிறார்கள்.
இந்நிலையில் சக கல்லூரித் தோழி பவித்ரா கார்த்திக் மேல் காதலாகி தன் விருப்பம் தெரிவிக்க, அவனோ மோனிகா ஓகே சொன்னால் உன் காதலை ஏற்பதில் தடை ஏதும் இல்லை என்கிறான். ஒரு சில கண்டிஷன்களோடு மோனிகாவும் கார்த்திக்- பவித்ரா காதலுக்கு ஓகே சொல்ல….இதன் பிறகு புதிய காதல் ஜோடி கேரளாவுக்கு பைக்கில் டூர் செல்ல, பாதி வழியில் நடந்த விபத்தில் பவித்ரா உயிரிழக்கிறாள்.
இந்த காலகட்டத்தில் கார்த்திக்,- மோனிகாவின் நட்பு அவர்களின் பெற்றோர்களையே இது காதலாக இருக்குமோ என்ற கோணத்தில் அணுக வைக்கிறது. இதனால் அவர்கள் திருமண முயற்சியை தொடங்க முன்வர… இவர்களோ நாங்கள் எப்போதும் நண்பர்கள் மட்டுமே என்று உறுதியாக நிற்க…இருவரும் இறுதி வரை தங்கள் நட்பில் நிலைத்திருந்தார்களா… அல்லது காலம் அவர்களையும் காதல் பட்டியலுக்குள் சேர்த்ததா என்பது எதிர்பார்ப்பும் திருப்பமும் கொண்ட திரைக்கதை.
கார்த்திக்காக அறிமுக நடிகர் ஜெகவீர் நட்பை உயர்த்தி பிடிக்கும் அந்த கேரக்டரில் ஒன்றிப் போகிறார். தனது பிரியமான தோழியின் நட்புக்காக அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் நட்புடன் கைகுலுக்க தோன்றுகிறது. காதலி பவித்ராவிடம்,மோனிகாவுடனான தனது நட்பு எத்தகையது என்று ஆவேசமாய் விளக்கும் இடத்தில் ‘இதல்லவா நட்பு’ என்று கொண்டாடத் தோன்றுகிறது.
மோனிகாவாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அவர் பங்குக்கு ‘நட்பு சிக்ஸர்’ அடிக்கிறார். நண்பனின் காதலியிடம் அவர் லேசான பொறாமை கொள்ளும் இடத்தில் சராசரிப் பெண்ணின் மனதை வெளிப் படுத்தும் அந்த நடிப்பு நிஜமாகவே ஜொலிப்பு.
நண்பனாக வரும் பால சரவணன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். கார்த்திக்கின் காதலி பவித்ரா கேரக்டரில் லத்திகா பாலமுருகன் அம்சம். கார்த்திக் மீதான காதலை கண் வழியாகவே கடத்தி விடுகிறார். கல்லூரியில் தன்னை அவமானப்படுத்தியவனை தட்டி கேட்க காதலன் வரவில்லை என்றதும் ஆக்ரோஷமாகி வார்த்தைகளை கொட்டும் இடத்தில் நடிப்பும் தாராளமாய் கொட்டுகிறது.
சிங்கம்புலி, ஜி.பி.முத்து காமெடி கூட்டணியில் கொஞ்சம் வில்லத்தனமும் செய்து தனித்து தெரிகிறார் சிங்கம்புலி.
பாந்தமான அந்த அப்பா கேரக்டரில் ஜெயப்பிரகாஷ் ஆஸம். அவரது மகளாக வரும் நடிகையும் ஒளிரும் நட்சத்திரமாய் பிரகாசிக்கிறார்.இமானின் இசையும் வி எஸ் ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்தின் கூடுதல் பலம்.
ஆண் பெண் ஈர்ப்பு என்றாலே காதல் மட்டும் தானா? அது நட்பாகவும் நிலைக்கலாமே என்ற சிந்தனையை இளைய தலைமுறை கோணத்தில் அணுகிய இயக்குனர் சுசீந்திரன், படம் நெடுக இளமை துள்ளல்களுடன் கதை சொல்லி இருக்கிறார். காதலுக்கும்
நட்புக்குமான நூலிழை வித்தியாசத்தை காட்சிப்படுத்தி இயக்குனர் செய்திருப்பது நட்புக்கு மரியாதை.