காதல் என்பது பொதுவுடமை – திரை விமர்சனம்

முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணிக்கு ஒரே பெண். கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் கலங்காமல் அன்பை கொட்டி மகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் மகள் லிஜாமோல் ஜோஸ் தனது காதல் பற்றி பேச வேண்டும் என்று அம்மாவிடம் கூற…

அம்மாவும் மகிழ்ந்து ‘அழைத்து வா என் மருமகனை’ என்க… மகள் அழைத்து வந்ததோ ஒரு பெண்ணை. அப்போது தான் மகளின் தன்பாலின ஈடுபாடு தெரிய வர…

இப்போது அப்பா அழைத்து வரப்படுகிறார். மகளுடன் வாழ வந்த பெண்ணை பார்த்ததும் அவரும் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் பக்குவமாக பேசி பார்க்கிறார். மகள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க, அப்பாவின் எதிர்வாதம் எடுபடாமல் போகிறது. அம்மாவும் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. முடிவு என்ன தான் ஆகிறது என்பது பரபர திரைக்கதை.
படத்தில் எல்லாரையும் விட நடிப்பில் முந்திக் கொள்பவர் அம்மாவாக வரும் ரோகிணி தான். மகள் ‘அந்த மாதிரி ‘ என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்து உள்ளூர உடைந்து போகும் இடங்கள் நடிப்பின் உச்சம். மகளைத் திருத்த அல்லது மாற்ற அடுத்து அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் பணால் என்று உடைந்து போகும் இடங்களில் அவர் முகத்தை பார்க்க வேண்டுமே..

தன் இணையிடமிருந்து தன்னை பிரித்து விடக்கூடாது என்பதில் போராட்டக் குணம் கொண்டவராக லிஜா மோல் ஜோஸ் அந்த கேரக்டரில் வெளுத்து வாங்குகிறார். அவரது இணையாக வரும் அனுஷா நடிப்பில் அமைதிப் புயல்.

லிஜாவின் காதலனாக முயன்று தோழனாக மாறும் கேரக்டரில் கலேஷ் அந்த பாத்திரத்துக்கே கனம் சேர்க்கிறார்.ரோகிணி வீட்டு வேலைக்கார பெண்மணியாக தீபாவின் நடிப்பில் புது மெருகு.கண்ணன் நாராயணன் இசை காதல் தாலாட்டு.

ஜெயப் பிரகாஷ் ராதா கிருஷ்ணன்இயக்கி இருக்கிறார். தன் பாலின காதலை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்திய விதத்தில் கண்ணியமாய் கரை சேர்ந்திருக்கிறது படம்.

Related posts

Leave a Comment