பாசமிகு அப்பா, கனிவு காட்டும் அம்மா, அண்ணன், அண்ணி என்று சின்ன குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் ரூபா குடவையூர்.ஆஸ்துமா பேஷண்டான அவர் ஒருநாள் தனது அப்பா கோபத்தில் கன்னத்தில் அறைந்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கில் தொங்கிவிடுகிறார்.ரூபா தற்கொலை செய்து கொண்டார் என்பது வெளியே தெரிந்தால் ஊரார் பலவிதமாக கதை கட்டுவார்கள் என பயந்த குடும்பத்தார், அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.
இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது தான் பிரச்சனை ஆரம்பம். தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருக்க, சடலத்தை தூக்க முயன்றவர்கள் சடலத்தில் ஏற்பட்ட திடீர் அசைவுக்கு பயந்து அலறி அடித்து வெளியே ஓடி வருகிறார்கள்.மீண்டும் சடலத்தை தூக்க இப்போது முன்பை விடவும் அதிகம் பேர் வருகிறார்கள். அவர்கள் தூக்க முயற்சிக்கும் போது அந்த சடலம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. இதனால் துக்க வீட்டுக்கு வந்தவர்களை பயம் பற்றிக் கொள்கிறது.சடலம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு புறப்பட எத்தனிக்கிறது என்பதாக புரிந்து கொண்ட ஊர் மக்கள், சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்பவரை அழைத்து வந்து, பார்க்க வைக் கிறார்கள்.
உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்த சடலத்தை பார்த்தவர், இந்த பெண் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறார் என்று சொல்கிறார் என்று கூறிவிட்டு கிளம்புகிறார்.இறந்த நாயகி ரூபா என்ன சொல்ல வருகிறார்? தொடக்கம் முதல் முடிவு வரை விறு விறு காட்சி அமைப்பில் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.ஒரு விஷயத்தில் கடைசி வரை அடமாக இருப்பவர்களை எம காதகன் என்று சொல்வார்கள். இங்கே அப்படி அடம் பிடித்து காரியம் சாதித்தது பெண் என்பதால் இவர் எம காதகி. நாயகியாக வரும் ரூபா அந்த கிராமத்து பெண் கேரக்டரில் எளிமையும் இளமையுமாய் அத்தனை அழகு. நலமாக இருக்கும் போதும் பிணமாக மாறும் போதும் நடிப்பின் அத்தனை மேனரிசங்களையும் நம்முள் கடத்தி விடுகிறார். பிளாஷ் பேக்கில் வரும் அவரது காதலும் உயிரோட்டமானது. திரைக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார்.
காதலனை செல்போனில் அழைக்கும் அந்த கடைசி தருணம் இவர் நடிப்பில் மகுடம்.ரூபாவின் காதலனாக நரேந்திர பிரசாத், காதல் காட்சிகளில் வசீகரிக்கிறார். பிணமான காதலியை பார்க்க வரும் நேரத்தில் அவர் நடிப்பும் பதட்டம் நிறைந்த அந்த உடல் மொழியும் ஆசம்.
நாயகியின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், மகள் பிணமானதும் பித்து பிடித்தது போல் அமர்ந்து விட்டு கடைசி நேரத்தில் தன் உணர்வுகளை குமு றலும் ஆவேசமுமாய் கொட்டித் தீர்க்கும் இடம் இமைகளை ஈரமாக்கி விடுகிறது.அப்பாவாக ராஜு ராஜப்பன், அண்ணனாக சுபாஷ் ராமசாமி, அண்ணியாக ஹரிதா, அவ்வப்போது போதையில் வந்து கலகலப்பு ஏற்படுத்தி போகும் ஊர் பெரியவர் வரை தங்களது பாத்திரங்களில் பளபளக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜ் இசையில் பாடல்கள் எல்லாரும் ரசிக்கிற மாதிரி இருக்க, பின்னணி இசை இன்னும் அபாரம்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் கேமரா துக்க வீட்டின் நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்துகிறது.சாதிய பாகுபாட்டின் வன்மத்தை தற்கொலை பின்னணியில் காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் நட்பின் ஜார்ஜ் ஜெயசீலன், ரூபாவின் தற்கொலையிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து கடைசி வரை படத்தை எதிர்பார்க்க வைத்து விடுகிறார்.
குறிப்பாக திரை மொழியை இவர் கையாண்டிருக்கும் விதம் மிக சிறப்பு. தான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை திரை மொழியில் உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறார். நாயகனின் அண்ணன் சம்பந்தப்பட்ட அம்மன் கிரீடம் தொடர்பான காட்சிகள் போலீஸ் வருகைக்குப் பின் படத்தை இன்னும் பரபரப்பாக்கி விடுகிறது.
மொத்தத்தில் இந்த யமகாதகி ரசனைக்குரியவள்.