சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு முதலாளிகள் ராதாரவி, சரண்ராஜ். இருவருமே தொழிலில் நேர்மையை கடைப்பிடிப்பவர்கள்.
ஆனால் இவர்களின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் இங்கே பிரச்சனை
ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ரெகுலராக தண்ணீர் கேன் போடும் வீடுகளில் இன்னொருவர் தண்ணீர் கேன் போட்டால் பிரச்சனை வராமல் இருக்குமா? அடி தடியில் ஒருவரை மற்றவர் காலி பண்ணும் அளவுக்கு போகிறார்கள்.
இதற்கிடையே குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதையாக காவல்துறை அதிகாரி ஜீவா ரவி புகுந்து ஒரு தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்.
இதுவே இரு தரப்பினருக்குமான பெரும் பகையாக உருவெடுக்கும் நேரத்தில் இன்னொரு நிறுவனத்தின் முதலாளியான ராதாரவி அதை சரி செய்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத சரண்ராஜின் ஆட்கள் ராதாரவியின் ஊழியர்களை கொல்ல திட்டமிடுகிறார்கள். அதனால் இரு தரப்பினரின் வாழ்க்கையும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே இந்த ‘வருணன்’.
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி, சரண்ராஜ் தங்கள் அனுபவ நடிப்பால் படம் முழுக்க நிறைந்து நிற்கிறார்கள்.
நாயகனாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், நாயகியாக கேப்ரில்லா மோதலும் காதலுமாய் படத்தின் இளமை பக்கங்களை நிரப்புகிறார்கள். மற்றொரு ஜோடியாக வரும் பிரியதர்ஷன்-ஹரிபிரியா ஜோடி காதலில் வீரியம் அதிகம்.
வில்லனாக வரும் சங்கர்நாக் விஜயன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவின் நல்வரவு. இன்னொரு குரூப்பை கொலை வெறியுடன் பார்ப்பது, அடிதடிக்கு அஞ்சாதது என வில்லத் தனத்தில் முழுசாக பாஸ் ஆகி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் கேமரா அதிரடி காட்சிகளை பாய்ந்து சுழன்று படமாக்கி இருக்கிறது. குறிப்பாக
120 அடி உயரத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம்
வியர்க்க வைக்கிறது.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள் சூப்பர்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழிலை மையமாக வைத்து கதை பண்ணியிருப்பார் என்று பார்த்தால் நிறுவன ஊழியர்களின் காதல், திருமணம், பழிவாங்கல் என்று கதையை வழக்கமான சினிமா பார்முலாவுக்கு திசை திருப்பி விட்டார்.
வருணன், வடசென்னையின் இன்னொரு பாகம்.