ட்ராமா – திரை விமர்சனம்

 மூன்று சம்பவங்களை ஒரே நேர் கோட்டில் இணைக்கிற கதை.திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் கர்ப்பமடையும் சாந்தினிக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் விவேக் பிரசன்னா தந்தை இல்லை என்று ஒருவன் போனில் தொடர்பு கொண்டு சொன்னதோடு, அது தொடர்பாக அவர் செல்போனுக்கு ஒரு வீடியோவையும் அனுப்பி வைக்கிறான். வீடியோ ரகசியம் வெளியே வராமல் இருக்க ரூ.50 லட்சம் பணத்துடன் குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்கிறான்.
இது ஒரு கதை.

அடுத்த கதை:
ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, காதலனால் கர்ப்பமடைந்த நேரத்தில் காதலனின் சுயரூபம் தெரியவர, அவனை அடியோடு கை கழுவுகிறாள்.

மூன்றாவது கதை:
புதிதாக கார் திருடும் நண்பர்கள் இருவர் ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நைசாக திருடிச் செல்கிறார்கள். போகிற வழியில் போலீஸ் சோதனையில் இவர்கள் ஓட்டி வந்த கார் டிக்கியில் ஒரு இளைஞன் பிணம் இருப்பது தெரிய வர…
மூவரின் பாதிப்புக்கு பின்னணியிலும் இருப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு
விடை தான் கதைக் களம்.

கணவன் -மனைவியாக விவேக் பிரசன்னா -சாந்தினி. மனைவியின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்று உள்ளுக்குள் மறுகும் நடிப்பில் அந்த கேரக்டருக்கு தனது நடிப்பால் ஜீவன் கொடுக்கிறார் விவேக் பிரசன்னா.

நாயகியாக வரும் சாந்தினி நடிப்பில் பலபடி மேலேறி நிற்கிறார். குழந்தைக்காக ஏக்கம், கர்ப்பமானதும் பரவசம், போன் வந்த பிறகு அதிர்ச்சியின் உச்சம் என நடிக்க கிடைத்த அத்தனை
களங்களிலும் அம்மணி சிக்ஸர் அடிக்கிறார். இன்னொரு ஜோடியாக வரும் பிரதோஷ்- பூர்ணிமா ரவி இருவரில் பூர்ணிமா ரவிக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். அதை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். காதலன் எப்படிப்பட்டவன் என்று தெரிய வந்த இடத்தில் அதிர்ச்சியை உள்வாங்கும் நடிப்பு நிஜமாகவே அற்புதம்.

இவரது பெற்றோராக மாரிமுத்து-ரமா நடுத்தர குடும்பத்தின் பெற்றோரை நடிப்பில் கண்முன் கொண்டு வருகிறார்கள்.விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் நல்ல நண்பன். நல்ல வில்லன்.போலீஸ் இன்ஸ்பெக்டராக சஞ்சீவ், டாக்டராக பிரதீப் கே.விஜயன், நிழல்கள் ரவி, வையாபுரி தங்கள் பாத்திரங் களுக்கு நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அருமை.எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், குழந்தை இன்மை பிரச்சினை மருத்துவ முறை கேடுகள் வழியே சிக்கி சிதிலமாவதை காட்சிப் படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

குழந்தை இல்லாத பெற்றோர், பெற்றோர் இல்லாத குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் அநாதை அடையாளத்தை மாற்றலாமே என்ற கருத்தை விதைத்த விதத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நல்வரவாகி இருக்கிறார்.

Related posts

Leave a Comment