எம்புரான்- திரை விமர்சனம்

கேரள முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கி விட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ படம் முடிவடையும்.

அதன் தொடர்ச்சியாக இதோ இரண்டாம் பாகம்.
முதல்வரான டோவினோ தாமஸ், மத அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம். இதனால், மறுபடியும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது கதைக்களம்.
இதற்குள் அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் அனல் தெறிக்க தந்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இரண்டாம் பாகத்தில், மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் அதிரடி நாயகனாக மாஸ் காட்டுகிறார்.

முதல் பாகத்தில் மோகன்லாலின் விசுவாசியாக வரும் பிரித்விராஜ் சுகுமார், இரண்டாம் பாகத்தில் சையத் மசூத் என்ற கதாபாத்திரம் மூலம் மனதில் பதிகிறார்.
முதலமைச்சரின் தங்கையாக மஞ்சு வாரியர், தனக்கான காட்சிகளில் தன் இருப்பை நிரூபிக்கிறார். பொதுக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தி தன்னை கொல்ல வரும் கொலையாளியிடமிருந்து தப்ப முடியாமல் தவிக்கும் இடத்தில், இக்கட்டான நிலையை உடல் மொழியில் பிரதிபலிக்கும் அந்த நடிப்புக்கு ஒரு ராயல் சல்யூட்.

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் கேமரா வெளிநாட்டு காட்சிகளை பட மாக்கிய விதத்தில் ஹாலிவுட் ரேஞ்ச் தெரிகிறது. இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளில் ஓசையாக மாறி காதை பிளக்கிறது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தோடு தொடங்கும் கதையை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக்கி தொடக்கத்திலேயே படத்தை எதிர்பார்க்க வைத்து விடுகிறார் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன். தற்போதைய கேரள அரசியல், தேசிய அரசியல் என போகிற கதையில் மத பிரச்சனைகளையும் இணைத்ததில் இயக்குனரின் சாமர்த்தியம்
தெரிகிறது.

அப்படியே மூன்றாம் பாகத்துக்கும் துண்டு போட்டு வைத்திருக்கும் சாமர்த்தியம் நிஜமாகவே இயக்குனர் ஸ்பெஷல்.

Related posts

Leave a Comment