மும்பையையே ஆட்டி வைத்த டான் ஏ.கே. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் நேர்கிறது. அழகான பெண்ணுடனான காதல் திருமணத்தில் முடிகிறது. மகன் பிறக்கிறான். இப்போது மனைவியின் ஒரே வேண்டுகோள், டான் வாழ்க்கையை தூக்கி போட்டுவிட்டு சரணடையுங்கள். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும்போது அமைதியான வாழ்க்கை வாழலாம் என்பது தான். டானுக்கும் அது சரி யெனப்பட, பிறந்த குழந்தையின் முன்பு அவனது 18-வது வயதில் சந்திப்பதாக உறுதி கூறிய பிறகு போலீசில் சரணடைகிறார்.
18 வருட தண்டனை முடிந்து வீடு வரும்போது பழைய எதிரிகள் செய்த சதியால் போதை பொருள் உபயோகித்த குற்றத்துக்காக இப்போது மகன் ஜெயிலில். மகன் குற்றவாளி அல்ல என்று நிரூபித்து தண்டனையிலிருந்து விடுபட வைக்க வேண்டும். இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை ‘களை’ எடுக்க வேண்டும்.
இதற்காக மீண்டும் டான் ஆகும் ஏகே., எதிரிகளை கண்டுபிடித்து களை எடுத்தாரா? மகனை மீட்டாரா? என்பது அதிரடி திரைக்கதை.
இந்த கதை வெட்டு குத்து துப்பாக்கி சூடு என்று போனாலும் படம் நெடுக கலகலப்பையும் இணைத்துக் கொண்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.டானாக அதிரடி காட்டியிருக்கும் அஜித் குமார் அந்த வேடத்தை ரொம்பவே ரசித்து செய்திருக்கிறார்.தனது ஒவ்வொரு அசைவிலும் டானுக்கே உரிய கெத்தில் வலம் வருபவர், மகன் மீதான சென்டிமென்ட், மனைவி மீதான காதல் என எல்லா ஏரியாவிலும் நடிப்பில் பிரித்து மேய்கிறார். இளமை இதோ இதோ பாடல் பின்னணியில் எதிரிகளை அவர் பந்தாடும் காட்சி ரசிகர்களின் கொண்டாட்டம்.
அஜித்தின் மனைவியாக வரும் திரிஷாவுக்கு கணவர் மீதான அன்பை விட மகன் மீது கரிசனம் அதிகம். அதை சரியாக செய்திருக்கிறார்.
வில்லனாக அதிலும் இரண்டு
வேடங்களில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், சின்ன சின்ன மேனரிசங்களுடன் இரண்டு பாத்திரங்களிலுமே வெளிப்படுத்தி இருப்பது அதிரடிப் பிரகாசம். குறிப்பாக ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ பாட்டுக்கு இவர் ஆடுவது அடேங்கப்பா ஆட்டம். இரட்டையர்களுக்கும் அஜித்துக்குமான ஆடு புலி ஆட்டம் காட்சிகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. பெரிய டானாக ஜாக்கி ஷெராப் மனதில் பதிகிறார்.
அஜித்தின் வலதுகரமாக சுனில், உறவினராக பிரசன்னா, பிரபு, சின்ன சின்ன கேரக்டர்களிலும் முத்திரை பதிக்கிறார்கள். சிம்ரன், பிரகாஷ் வாரியர் சிறப்பு தோற்றமும் படத்தின் இன்ன பிற ஸ்பெஷல். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறது. குறிப்பாக, திரிஷாவை இளமையாக காட்டுவதில் இவரது கேமரா அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் இளையராஜாவின் பழைய பாடல்கள் திரையரங்கை குதூகலமாக வைத்திருக்கின்றன.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கை வண்ணத்தில் சண்டைக் காட்சிகள் திரை தாண்டி தெரிக்கிறதுஎழுதி இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் என்ற மாஸ் ஹீரோவை டான் கதைக்குள் வைத்து இவர் நடத்திருப்பது மாஸ் திருவிழா.