பாதிக்கப்பட்டவர்கள் போதிக்கும் புதிய பாடம். மகளுக்கு நேர்ந்த பாதிப்புக்கு தந்தை எடுக்கும் புதிய அவதாரம். கிராமத்தில் மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விவசாயி பிரேம்ஜியை மனைவியின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இதன் பிறகு அந்த ஊரில் இருக்க மனதின்றி மகளுடன் சென்னை வருகிறார். இப்போது அவரது ஒரே கனவு, மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது தான். சென்னையில் கிடைத்த புதிய ஆட்டோ நண்பர் உதவியுடன் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளிப் படிப்பு என்று அனைத்தும் அமைகிறது.
இதற்கிடையே உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து தந்தையிடம் ஒரு நாள் மகள் பகிர்ந்து கொள்ள, மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக தந்தையும் மகளும் மருத்துவரை சந்திக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் சிறுமி தனக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப் பதை மருத்துவர் உறுதிப்படுத்த…
அந்தக் காமுகனை கண்டுபிடித்து கொல்ல தந்தையும் மகளும் திட்டமிடுகிறார்கள்.
அவனை கண்டு பிடித்து பழி வாங்கினார்களா? என்பது பதற்றமும் பரபரப்புமான கிளைமாக்ஸ்.
அப்பாவாக பிரேம்ஜி, மகளாக திவ்யதர்ஷினி.
மகளே தன் உலகம் என்று வாழ்ந்து வரும் கிராமத்து தந்தை, எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாத அந்த தந்தை மகளுக்கு நேர்ந்த கொடுமைக்காக எந்த எல்லைக்கும் போக துடிக்கும் இடத்தில் உள்ளுக்குள்ளே பொங்கி வடியும் ஒரு எரிமலையின் சீற்றத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் பிரேம்ஜி.
மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக மட்டுமின்றி நண்பனாகவும் அவரது பாசப்பயணம் படத்தை தூணாக தாங்கி நிற்கிறது. இதுவரை காமெடியாகவே பார்த்து பழக்கப்பட்ட வரை இப்படி ஒரு வல்லமை மிகு கேரக்டரில் பார்க்கும்போது நிஜமாகவே பிரேமிக்கிறோம் ஜி.
மகளாக நடித்த அந்த குட்டிப் பெண் இன்னொரு நடிப்பு அற்புதம். அவனை எப்படியாவது கண்டு பிடிச்சு கொன்னுடணும்பா’ என்று சொல்லும் இடத்தில் அந்த வலி நமக்குள்ளும் கடந்து போவதென்னவோ நிஜம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக ’வழக்கு எண்’ முத்துராமன், கான்ஸ்டபிளாக சூப்பர் குட் சுப்பிரமணி, தொழிலதிபராக சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக விது, பள்ளி ஊழியராக திலீபன் மருத்துவராக வரும் தீபா சங்கர் சிவ காட்சிகளே என்றாலும் சிறப்பு.
இசையமைப்பாளர் ஜி.கே.வி. இசையில் வெங்கட் பிரபு பாடும் மகளே மகளே பாடல்
மனதுக்கு நெருக்கமானது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் கருப்பையா முருகன். பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய அவலத்தை ஆணி அடித்து சொல்லி இருக்கிறார். மகளின் வலிக்கு தந்தையின் வலிமை எப்படி ஒத்தடம் கொடுக்கிறது என்பதை சொன்ன விதத்திலும் சூப்பர்ப்.
மொத்தத்தில் இந்த வல்லமை, வலிமை.