ஸ்கூல் – திரை விமர்சனம்

ஜாதி மதம் இல்லாத சமுதாயம் உருவாக ஒரு பள்ளிக்கூட பின்னணியில் இருந்து கதை சொல்லி இருக்கிறார்கள்,சற்று ஆழமாகவே.இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், தங்கள் பள்ளி மாணவர்களை மனதளவில் தயார் செய்கிறார். அதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகமும் எழுதுகிறார். ஆனால், அந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகிறார்கள். வெற்றி மட்டுமே வாழ்க்கை. இல்லை எனில் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்று அவர் அந்த புத்தகத்தில் சொன்ன கருத்து மாணவர்களை தற்கொலை வரை அழைத்துச் செல்கிறது.

இதற்கிடையே, அந்த புத்தகம் மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இது கண்ணுக்கு தெரியாத உருவம் செய்யும் வேலை என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் அதை ஏற்க மறுப்பதோடு, அதன் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். ஆனால், அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் மரணம் வரை தொடரவே, அதிர்ந்து போகிறார்.

இதற்கிடையே, பள்ளியில் இருக்கும் அமானுஷ்ய சக்திகளை பற்றி தெரிந்து கொண்ட பிரபல ஆன்மீகவாதியான உலகநாத சுவாமிகள் அந்தப் பள்ளிக்கே வந்து ஆவிகளை வரவழைத்து பார்த்ததில் அதே பள்ளியில் படித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவன், மாணவி தான் அந்த ஆவிகள் என கண்டறிகிறார். அவர்கள் தற்கொலை பின்னணியில் இருப்பதும் அந்தப் புத்தகமே என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இந்த நேரத்தில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான யோகிபாபு மற்றும் பூமிகா சாவ்லா அந்த பள்ளிக்கு மீண்டும் வர, அவர்களை பார்த்ததும் அந்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகிறது. அதன் பிறகே அந்த மாணவ ஆவிகள் பிரபல மந்திரவாதி
ஒருவனால் இந்தப் பள்ளியின் வளர்ச்சியை சீர்குலைக்க அனுப்பப்பட்டவை என்பதும் தெரிய வருகிறது.

பள்ளியின் பெயரை சீர்குலைக்க மந்திரவாதி மூலம் முயற்சி செய்தது யார்? அதன் பிறகு அந்த ஆவிகள் அமைதியானதா? என்பது சஸ்பென்ஸ் பின்னணியிலான கிளைமாக்ஸ்.

ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, காமெடியை விடவும் குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்த்திருக்கிறார். வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை சொல்ல பூமிகாவை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக சாம்ஸ், மந்திரவாதியாக நிழல்கள் ரவி கேரக்டர்கள் மூலம் தங்கள் நடிப்புக்கு நியாயம் செய்கிறார்கள். உலகநாத சுவாமியாக இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் வந்து ஆவிகளின் இன்னொரு உலகத்தை காட்டிப் போகிறார்.

இளையராஜாவின் இசை படத்தின் இன்னொரு பக்க தூணாக தாங்கி நிற்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜின் கேமரா ஆவி காட்சிகளில் சற்றே மிரள வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கிறார், ஆர்.கே வித்யாதரன். அறிவு போதிக்கும் பள்ளியில் ஆவிகளை கொண்டு மாணவர்களுக்கு புதிய படம் புகட்டியி ருக்கிறார்.

Related posts

Leave a Comment