கட்ஸ் – திரை விமர்சனம்

 

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, அதிகார
பலமிக்கவர்ளை எதிர்க்கத்
துணிந்தால் என்னாகும்?

ரங்கராஜ் நேர்மையான இன்ஸ்பெக்டர். அநீதிக்கு துணை போகாதவர். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கத் தயங்காதவர்.
இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னணியில் அந்த ஊரின் தொழில் அதிபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர, கைது செய்ய முனைகிறார். அதற்கு தண்டனையாக அவரது கர்ப்பிணி மனைவி தொழிலதிபரின் அடியாட்களால் கொல்லப்படுகிறார். தாயை இழந்து
வாடும் ஐந்து வயது மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறார் போலீஸ் அப்பா.
இந்த சமயத்தில் அவரது தந்தையும் இதே நபரின் தந்தையால் கொல்லப் பட்டது தெரிய வர, நாயகன் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரமே கதை.

விவசாய நிலத்தை அதிக மகசூல் என்ற பெயரில் ஆசை காட்டி ஊராரை ஏமாற்ற முனைந்த வெளியூர்க் காரனை துரத்தி அடிக்கும் கிராமத்து விவசாயி பெத்தனசாமி கேரக்டரிலும், அவரது மகனாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கேரக்டரிலும் அறிமுக நடிகர் ரங்கராஜ் திரை பிரவேசம் செய்து இருக்கிறார். அப்பாவாக நடிப்பில் கம்பீரம் காட்டியவர், மகனாக காக்கி சட்டை நடிப்பில் புதுவித ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார்
முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து ஏரியாவிலும் இறங்கி அடித்து ஆச்சரியப்படுத்துகிறார்.
அப்பாவாக, மனைவி சுருதி நாராயணனிடம் காட்டும் அந்த பரிவிலும் பணிவிலும் நடிப்பு முத்திரை பதிப்பவர், மகனாக மனைவி நான்சியுடனான செல்லக் குறும்புகளிலும் ஜமாய் க்கிறார்.
மனைவியின் சடலம் முன்பு விழுந்து கதறும் இடத்தில் அந்த தவிப்பும் துடிப்பும் அறிமுக நடிகரா இவர் என்று கேட்க வைக்கிறது.
அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக நடிப்பில் இயல்பு காட்டுகிறார். மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸி அனாதை விடுதியில் நாயகனிடம் தன் காதலை சட்டென சொல்லி முடிக்கும் இடம் கவிதை மயம்.
மூத்த காவலராக டெல்லி கணேஷின் பங்களிப்பு மகத்தானது.
பெரும்பாலான படங்களில் வில்லனாக மட்டுமே அறியப்பட்ட சாய் தீனா இதில் நாயகனின் தாய்மாமாவாக வந்து குணச்சித்திர நடிப்பில் நெகிழ வைக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அறந்தாங்கி நிஷா பொருத்தமான பாத்திரங்களில் தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். கார்ப்பரேட் வில்லனாக பிரவீன் மஞ்ச்ரேக்கர் ஓகே.
ஒளிப்பதிவாளர் மனோஜின் கேமரா சண்டைக் காட்சிகளில் இன்னொரு நாயகனாகவே உணர வைக்கிறது.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம். பின்னணி இசையில் வசனங்களை
விழுங்குகிற அளவுக்கு ஓசை அதிகம்.
நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவின் பல்வேறு கால கட்டங்களில் நாம் பார்த்த வழக்கமான பழிவாங்கும் ஆக்‌ஷன் படம் தான் என்றாலும், சில மாற்றங்களோடு சொல்ல முயன்று இருக்கிறார். திரைக்கதையில் சற்று கூறுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் வேற லெவல். என்றாலும் முதல் படத்திலேயே இரட்டை வேடம், இயக்கம் என்று ரங்கராஜ் காட்டிருப்பது புது வேகம்.

Related posts

Leave a Comment