யானை படங்கள் எத்தனை வந்தாலும் தமிழ் சினிமா தாங்கும். அப்படி ஒரு சமீபத்திய வரவு தான் இந்த படைத்தலைவன். வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை ஒன்றை நாயகன் சண்முக பாண்டியனின் தாயார் பிள்ளையைப் போல வளர்க்கிறார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாசமாக வளர்த்த யானை அந்த வீட்டில் ஒருவராகிப் போகிறது. இதற்கிடையே தொழிலுக்காக கடன் கொடுத்த உறவினர் பல்வேறு நெருக்கடி கொடுக்கிறார். குறித்த நாட்களில் பணத்தை வட்டியுடன் திருப்பி தரா விட்டால் நடப்பதே வேறு என்று அவர் கர்ஜித்துப் போக, இதனால் யானையை திருவிழாக்கள் கல்யாண வீடுகளுக்கு வாடகைக்கு விட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைத்து விடலாம் என்று சண்முக பாண்டியன் நண்பர்கள் ஆலோசனை சொல்ல, அதை குடும்பமும் ஏற்கிறது.
அப்படி ஒரு திருமண வீட்டுக்கு வாடகை பேசி யானையை அழைத்து சென்ற போது இதே உறவினர் ஏற்பாட்டின் மூலம் யானைக்கு மதம் பிடிக்க… யானை வனத்துறை வசம் போகிறது. அங்கிருந்து காணாமல் போகிறது. கடத்தியவர்கள் மூலம் ஒடிசா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு போகிறது.
யானையை மீட்டு வர நாயகன் மேற்கொள்ளும் அடுத்தடுத்த போராட்டங்கள் வெற்றி பெற்றதா… யானை மீட்கப்பட்டதா என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியனிடம் அவரது முந்தைய இரண்டு படங்களை விட, இதில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. ஓங்குதாங்கான அந்த உடல்வாகு நூறு பேரை அவர் அடித்து போட்டாலும் நம்ப வைக்கிறது.
சண்முக பாண்டியனின் தந்தையாக இயக்குநர் கஸ்தூரி ராஜா, பழங்குடியின பெண்ணாக யாமினி சந்தர், வில்லன்களாக கருடன் ராம், ரிஷி, குணச்சித்திர கேரக்டர்களில் முனிஷ்காந்த், அருள் தாஸ், யூகிசேது, காக்கா கோபால், ஏ.வெங்கடேஷ் கிடைத்த கேரக்டர்களில் மனம் பதிகிறார்கள். ஓரிரு நிமிடமே என்றாலும் புதிய தொழில் நுட்ப உபயத்தில் விஜயகாந்த் வந்து போகும் இடம் நிஜமாகவே சிலிர்ப்பூட்டுகிறது.
இளையராஜா இசை படத்துக்கு ஆனை பலம். இரண்டு பாடல்கள் மனதை வருடுகின்றன. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா வனப்பகுதிகளை அழகாகவும், ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாகவும் கண்களுக்கு நெருக்கமாக்குகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் யு.அன்பு. உயிராக நேசித்த யானையை மீட்க நாயகன் மேற் கொள்ளும் முயற்சிகளும் அதிரடி திருப்பங்களும் பிற்பகுதி படத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன.
இந்த படைத்தலைவன் பாசமும் வீரமும் மிக்கவன்.