பணிப்பெண்ணை சீண்டிய அலுவலக மேலாளரை தட்டிக் கேட்டபோது உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்துகிறது நிர்வாகம். அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபத்தில் எரிந்து விழும் மனைவி, வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனிடம் முறை வாசலுக்கும் சேர்த்து பணம் கேட்கும் உரிமையாளரிடம் ஆத்திரம்.. உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், அவமானப்படுத்தும் அறை நண்பன்… இப்படி ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களை கடந்து செல்லும் நாயகன், அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று எண்ணி அன்றைய இரவு மதுவில் குளிக் கிறார். இதற்கிடையே காணாமல் போன குழந்தையை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையும், நாயகனால் பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறை தங்களை டென்ஷன் ஆக்கிய நாயகனையும் சேர்த்து தேடுகிறது. நாயகன் போலீசில் சிக்கினாரா… கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறை உயிருடன் மீட்டதா? விடிந்த பொழுது யாருக்கு நல்ல பொழுது (குட் டே ) என்பது திகிலும் திருப்பமுமான திரைக்கதை.
மனதில் பல்வேறு அழுத்தங்களை சுமந்து பாதிக்கப்பட்டிருப்பவர்களை மது போதை எப்படிஎல்லாம் ஆட்டிப்படைக்கிறது? அதன் மூலம் அவர்கள் தங்களைத் தாங்களே எப்படி எல்லாம் இழிவுப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நடுத்தர குடும்பத் தலைவனின் போதை பாதையில் இருந்து நமக்கு பாடம் நடத்தி இருக்கிறார்கள்.
குடியும் கொண்டாட்டமுமான அந்த நாயகன் கேரக்டரை அசால்ட் டாக தோளில் சுமந்து இருக்கிறார் அறிமுக நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம். அந்த நள்ளிரவில் கடந்த கால கல்லூரி தோழி யை போனில் தொடர்பு கொண்டு அவள் வீட்டுக்கே போய் செய்யும் அலப்பறைக்கு சிரித்த சிரிப்பில் அரங்கே தள்ளாடுகிறது.
காட்டில் வெட்டியானாக இருக்கும் வேல. ராம மூர்த்தியிடம் வாழ்க்கை பாடம் கற்கும் இடத்தில் இவர் நடிப்பு திரைக்கு மேலும் ஒரு நாயகன் கிடைத்ததை உறுதி செய்கிறது.
நாயகனின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி, கல்லூரிக் கால நண்பனின் நடுராத்திரி போதை விசிட்டை எதிர்பாராமல் மிரளு ம் இடத்தில் நடிப்பில் சிக்சர் அடிக்கிறார். போதையில் அதுவும் நட்ட நடு ராத்திரி வந்தது மனைவியின் நண்பனா அல்லது காதலனா என்று கதி கலங்கும் இடத்தில் ஆடுகளம் முருகதாசு ம் நடிப்பில் விளா சுகிறார். ஆட்டோ ஓட்டுநராக வந்து நாயகனின் திடீர் நண்பனாகும் காளி வெங்கட் தன் பங்கேற்புக்கு வஞ்சகம் செய்யாமல் சிரிக்க வைத்து விட்டு போகிறார். டெய்லர் பகவதி பெருமாள், சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்பவராக வேல ராமமூர்த்தி, அறிவுரை சொல்பவராக போஸ் வெங்கட், கடுகடு போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜய் முருகன், போலீஸ்கார ஜீவா சுப்ரமணியம் ஆகியோர் நாயகனின் ராத்திரி பயணத்தில் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரு காட்சி என்றாலும் கவிஞர் கார்த்திக் நேத்தா கச்சிதம். கோவிந்த் வசந்தாவின் இசையில் அச்சு வெல்லம் பாடல் அத்தனை தித்திப்பு.
ஒளிப்பதிவாளர் மதன் குணதேவ், இரவு நேர காட்சிகளை படம் பிடித்த விதம் சிறப்பு.
மது போதையில் மிதக்கும் நாயகனாக நடித்த பிரித்திவிராஜ் ராமலிங்கமே இந்த கதையையும் எழுதி இருக்கிறார். மன அழுத்தத்திற்கு மது தீர்வு அல்ல, அது மேலும் மேலும் மன அழுத்தத்தைத் தான் கொடுக்கும் என்பதை கதைபோகிற போக்கில் சொல்லி இருக்கிறார். என்.அரவிந்தன் இயக்கி இருக்கிறார். நாயகனின் போதைப் பாதையில் நம்மையும் பயணிகளாக இணைத்துக் கொண்டதில் காட்சிகள் சுவாரசியமாகி விடுகிறது. மறுநாள் விடியும் பொழுதில் அவன் திருந்தி இன்னொரு குடி நிர்வாகிக்கு புத்தி சொல்கிறான் என்பதை மட்டும் சரக்கு சத்தியமாய் நம்ப முடியவில்லை. என்றாலும் மதுக்கடைகளை ஒழிக்க பெண்கள் போராட்டம் போன்ற காட்சிகளில் நினைத்ததை நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர்.

