சென்னையில் எம். எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக கைதாகிறார் சூர்யா சேதுபதி. கொலை செய்யப்பட்டவர் எம். எல்.ஏ. என்பதால் அந்த ஏரியாவே கொந்தளிப்பாக இருக்கிறது.
நீதிமன்ற காவலில் இருக்கும் சூர்யா சேதுபதியை கொல்ல எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்ஷ்மி சரத்குமார், தனது அடியாட்களை சிறைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் சூர்யாவோ அத்தனை பேரையும் அடித்து துவைத்து அனுப்பி வைக்கிறார். யார் இந்த சூர்யா.? இவர் எதற்காக எம் எல் ஏ-வை கொன்றார்? கேள்விக்கு விடை அதிரடி மேளாவுடன் கூடிய கிளைமாக்ஸ். தனது முதல் படத்திலேயே அதிரடி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் சூர்யா சேதுபதி. நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்து விடுவார் என்று நம்புவோம் வரலக்ஷ்மி சரத்குமார், முத்துக்குமார், ஹரீஷ் உத்தமன், சம்பத், அபி நக்ஷத்ரா, தேவதர்ஷினி, காக்கா முட்டை விக்னேஷ் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
சாம் சி எஸ் இசையில் குத்துப் பாடல் ரசிக்கலாம் பின்னணி இசை அதிரடி படத்திற்கு ஏற்ப முழங்கி இருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். ஒரு ஸ்டண்ட் மாஸ்டரிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதை, அதாவது சண்டைக் காட்சிகளை செவ்வனே செய்திருக்கிறார். செல்வாக்கு மிக்க வர்களுடன் மோதும் ஒரு சாதாரணன் கதை திரைக்குப் புதிதல்ல என்றாலும், ஒரு புதுமுகத்தை வைத்து இயக்கிய தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்.