95 காலகட்டத்தில் வேலூர் சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகளின் போராட்டமே கதைக்களம்.
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்து அகதி முகாமில் தங்கினால் அங்கும் நிம்மதியற்ற வாழ்க்கை. இப்படி இலங்கையில் இருந்து வந்த ஒரு கும்பலில் கர்ப்பிணி யாக இருக்கும் மனைவி வந்துவிட, அவளை தேடி கணவனும் வருகிறார். இந்த சமயத்தில் முன்னாள் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்த தீவிரவாத இயக்கத்தை கண்டுபிடிக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. அதில் ஒன்று, கடந்த ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரணை நடத்துவது.
இந்த விசாரணை வளையத்தில் மனைவியை தேடி தமிழகம் வந்த சசிகுமாரும் சிக்கிக் கொள்கிறார். போலீசார் சசி உள்ளிட்டவர்களை வேலூர் சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து கொடுமைப் படுத்துகிறார்கள். . ரத்தம் சொட்ட சொட்ட அடி உதை. அனுதினமும் இதுவே விசாரணை என்ற பெயரில் நடந்து வர… இதற்கிடையே அகதி முகாமில் சசிக்குமாரின் மனைவி லிஜா ஒரு பெண் மகவை பெற்றெடுக்கிறார். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பிய நிலையிலும் சிறையில் விசாரணை கைதி கள் என்ற பெயரிலேயே சசி அண்ட் கோவுக்கு கொடுமை தொடர்கிறது. ஆக, வெளியே வர வேண்டுமானால் சிறையில் இருந்து தப்பித்து வந்தால்தான் ஆயிற்று என்ற முடிவுக்கு வருகிறார் சசிகுமார். போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு சிறைக்குள் சுரங்கம் தோண்டி எப்படி தப்பித்தார்கள் என்பதை உணர்வும் நெகிழ்வுமாய் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக சசிகுமார். இலங்கையில் அநியாயத்தை எதிர்த்து கேட்டு சிறைக்கு செல்லும் இடத்திலிருந்து தொடங்குகிறது அவரது நடிப்பு சாம்ராஜ்யம். பிறந்த குழந்தையை கூட நான்கு வருடங்களாக பார்க்க முடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் தவிப்பை நமக்குள் சுலபமாய் கடத்தி விடுகிறார். சிறையில் நடக்கும் அக்கிரமத்தை எதிர்த்து ஆவேசமாய் போலீசாரை அடித்து துவைக்கும் இடத்தில் கரகோஷத்தில் அரங்கு அதிர்கிறது. தன்னை பார்க்க வரும் குழந்தைக்காக சிறையில் ஒரு பொம்மை செய்து அதை தன் மகளிடம் கொடுக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மகளைப் பார்க்க முடியாத தருணம், நிஜமாகவே அந்த தந்தையின் வலி திரை ஆக்கிரமிப்பு செய்கிறது.
சசிகுமார் மனைவியாக லிஜோ மோல் அந்த பாத்திரத்தை நடிப்பில் அழகாக சுமந்து இருக்கிறார். அகதியாக, கர்ப்பிணியாக, கணவனை காண பரிதவிக்கும் மனைவியாக அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்.
வாய் பேச முடியாத அகதியாக மணிகண்டன். சிறையில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியாதவராக தன்னை மாய்த்துக் கொள்ளும் கேரக்டரில் நடிப்பால் நிறைய பேசியிருக்கிறார். கொடூர ஜெயில் அதிகாரியாக வரும் சுகதேவ் நாயர் கண்களில் வன்மம் வெளிப்படும் விதமே தனி. அகதிகள் மீது காட்டும் காழ்ப் புணர்ச்சியில் தேர்ந்த வில்ல நடிகராக முத்திரை பதிக்கிறார். அகதிகளை வைத்து சசிகுமாரை கொல்ல இவர் திட்டமிடும் இடங்கள் பகீர் ரகம்.
கொஞ்ச நேரமே வந்தாலும் ஜெயில் அதிகாரிக்கு மிரட்டலாய் அறிவுரை சொல்லும் இடத்தில் ரமேஷ் கண்ணாவிடம் அனுபவ நடிப்பு பேசுகிறது. விசாரணை கைதிகள் தப்பியது தெரிய வந்ததும் ஏற்படும் பதட்டத்தை அதிர்ச்சியை போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் இயல்பாக வெளிப்படுத்துகிறார். 90-களின் காலகட்டத்தை நம் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவுக்கு ஒரு தனி சபாஷ். சத்ய சிவா இயக்கியிருக்கிறார். 90 காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விசாரணை கைதிகள் என்ற பெயரில் அகதிகளுக்கு நேர்ந்த கொடுமையை நெஞ்சம் கனக்க சொல்லி இருக்கிறார்.
