மானிட ஜாதியில் நான் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று ஒரு பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன். பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருக்கும் வாசன் என்ற முன்னணி எழுத்தாளரும் படைப்பாளி என்பதால் தன்னை இறைவனாக எண்ணிக் கொள்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் எழுதும் கதையில் பாதிக்கப்படும் கதாபாத்திரங்கள் அவரை தேடி வந்து இம்சை செய்கின்றன. தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் என எண்ணி கோபத்தில் அவரை துரத்துகின்றன. அந்த கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளர் எப்படித் தப்பிக்கிறார் என்பது தான் கதைக்களம். சமூகத்தை தங்கள் எழுத்தால் மேம்படுத்துவதில் எழுத்தாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இங்கே நமது படைப்பாளியோ தனது கதாபாத்திரங்களுக்கு சுமுகமான தீர்வளிக்க தவறிவிடுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கதாபாத்திரங்கள் கதையின் போக்கை மாற்றி தங்களுக்கு நல்லதோர் தீர்வை அடிக்க கட்டாயப்படுத்த, அதற்கு அந்த படைப்பாளி மறுக்க, அதனால அதை துரத்துவது தாக்குவது என்று அவரது கேரக்டர்களின் துரத்து தலே இந்த கதை. எழுத்தாளர்கள் சமூக பொறுப்புடன் தங்கள் படைப்புகளை அணுக வேண்டும் என்பதை புதிய கோணத்தில் சொல்லி ரசிக்க வைக்கிறார்கள்.
மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார், தன்னை இறைவன் என்று சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர் வாசன். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50-வது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். ஆனால், கையில் ஆயுதம் எடுத்தால் கூட அவனது ஐம்பதாவது கொலை அவருக்கே உடன்பாடில்லாமல் தள்ளிப் போகிறது. இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவி ராஜிக்கு ‘நீட்’ தேர்வு பயமுறுத்தி அவளை பூச்சிமருந்து பாட்டில் பக்கம் திருப்புகிறது. மூன்றாவது தொடரில், வேலைக்காரப் பெண் செல்வி மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழியைப் போடுகிறார் வீட்டு எஜமானி ராதிகா. அதனால் ஏற்படும் விபரீதத்தில் செல்வி உயிரை விட, செத்துப்போன செல்வி கேரக்டர் எழுத்தாளரின் வீட்டிற்கே வந்து, “நேர்மையான என் மீது ஏன் இந்தப் பழியைப் போட்டீங்க?” எனக் கேட்க… பின்னாலேயே வரும் செல்வியின் வீட்டு எஜமானி கேரக்டரான ராதிகா, “என் புருஷன் மாதிரி செல்விக்கு சப்போர்ட் பண்ற வேலை வச்சுக்காதீங்க” என எச்சரிக்கிறது. செல்வியின் கணவர் கேரக்டரோ , தனது மனைவிக்காக வாசனைக் கடத்திக் கொலை செய்ய முனைகிறது.

இவர்களிடம் எல்லாம் அடி உதைபட்டு மருத்துவமனைக்குப் போகும் வாசனிடம், “எனக்கு ஏன் சின்ன வயசுல இருந்தே டாக்டர் கனவை ஊட்டி வளர்த்தீங்க?” என்று தற்போது நர்சாக இருக்கும் முன்னாள் பள்ளி மாணவி ராஜி கேரக்டர் ஒரு ஊசியைப் போட்டு அவரை எமலோகம் அனுப்பி வைக்கப் பார்க்கிறது. ராஜியிடம் இருந்து தப்பி ஓடும் வாசன், அவர் படைத்த ரவுடி தனபாலிடம் சிக்கிக் கொள்கிறார்.
இப்படி நிழல் உலகில் சிக்கிக் கொண்டு தவிக்கும் எழுத்தாளர் வாசன் எப்படி இதிலிருந்து தப்பிக்கிறார் என சுவாரசியம் குன்றாமல் சொல்லி இருக்கிறார்கள்.
பத்திரிகை ஆசிரியராக டெல்லி கணேஷ், தனபாலாக நடித்துள்ள சாய் தீனா, சிற்பியாக நடித்துள்ள மு.ராமசாமி தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். மையக் கதாபாத்திரமாக எழுத்தாளராக நடித்துள்ள நாகராஜன் கண்ணன் படம் முழுக்க தனது நடிப்பால் வியாபித்து நிற்கிறார்.
வாசனின் மனைவி இந்துவாக நடித்துள்ள S.K.காயத்ரி இன்னொரு இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர். மருத்துவ கனவை சுமக்கும் ராஜியாக மிருதுளா பொருத்தமான பாத்திரத் தேர்வு. செல்வியாக பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த கேரக்டரில் தன்னை அழகாக பொருத்திக் கொள்கிறார். செல்வியின் கணவராக உடன்பால் படத்தின் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், அனிமேஷன் செய்துள்ள அதிதி ஹரிகுமார் கதையை தாங்கிப் பிடிக்க தூணாக உதவுகிறார்கள். இயக்கி இருக்கிறார் ஏ.பி.ராகவேந்திரா. எடுத்துக்கொண்ட கதைக் கருவை புதிய புதுமையான முறையில் அணுகியதற்காகவே தமிழ் திரையுலகம் நிச்சயம் இவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்.

