மாரீசன் – திரை விமர்சனம்

மாரீசன்’ என்பது ராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கதாபாத்திரம். மாரீசன், தனது. உறவினர் ராவணனின் உத்திரவின் பேரில் சீதையை கவர்வதற்காக மாயமான் வேடத்தில் வருகிறான். அதன் பின்னணியில் சீதையை ராவணன் கடத்துகிறான். சூழ்ச்சிக்கும் மாயத்திற்கும் தந்திரத்திற்கும் மாரீசன் கதாபாத்திரம் குறியீடாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள்.

படத்தில் வரும் பல பாத்திரங்களில் மாரீ சன் எங்கே ஒளிந்து இருக்கிறான் என்பது கதைக்களம்.

சின்னச் சின்ன திருட்டுகளில் கில்லாடியான பகத் பாசில் தண்டனை முடிந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். வந்ததுமே ஒரு செல்போன் ஒரு பைக் என்று மீண்டும் திருட்டு வேலையை ஆரம்பித்து விடுகிறார். அடுத்து எந்த வீட்டில் திருடலாம் என்று நோட்டம் பிடிப்பவர் வடிவேலு வீட்டில் நுழைகிறார். வடிவேலுவோ கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்க, தனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதால் வீட்டிலேயே மகன் கட்டி போட்டு வைத்திருப்பதாக கூறுகிறார். சங்கிலியில் இருந்து விடுவித்து வெளியே அழைத்துச் சென்றால் ஏடிஎம்மில் ரூ. 25 ஆயிரம் எடுத்து தருவதாக கூறுகிறார். வந்தவரை லாபம் என்று அவர் கூறுவதை நம்பி அவரை விடுவிக்கிறார் பகத் .இருவரும் பைக்கில் புறப்படுகிறார்கள். ஏடிஎம்மில் வடிவேலு பணம் எடுத்து தரும் போது அவரது வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் இருப்பதை தெரிந்து கொள்ளும் பகத் பாசில், வடிவேலுவை ஏமாற்றி மொத்த பணத்தையும் அபகரிக்க நினைக்கிறார். அதற்கான முடிவோடு வடிவேலு போக விரும்பும் ஊர்களுக்கு எல்லாம் அவரை பைக்கில் அழைத்து செல்கிறார். அப்படி போகிற இடங்களில் எல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு கொலை நடக்க, அந்தக் கொலையை செய்வது வடிவேலு தான் என்பதே ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்கிறார். அப்படியே அவருக்கு ஞாபக மறதி நோய் இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறார்ம் இதன் பிறகு வடிவேலு விஷயத்தில் பகத் பாசில் என்ன முடிவு எடுக்கிறார் என்பது சஸ்பென்ஸ் திரைக் களம்.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து வடிவேலுக்கு இது இன்னொரு முக்கிய படம். காமெடியே இல்லாத வடிவேலுவை பார்ப்பது புதுவித அனுபவம் தான். பைக் பயணத்தில் படிப்படியாக பகத் பாசிலின் அன்பைப் பெறும் இடங்கள் ரசனைக்கான இடங்கள். தன் மனைவிக்கே தன்னை யார் என்று தெரியவில்லை என்று கலங்கும் இடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டுகிறது.
படம் முழுக்க அந்த திருடன் பாத்திரத்தில் கலகலப்பு ரகளை செய்கிறார் பகத். சாதாரணமாக நினைத்த வடிவேலு எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்து பகத்தின் அணுகுமுறை வேற லெவல். மொத்த பணத்தையும் ஆட்டை போட நண்பன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டும் இடங்கள் சஸ்பென்சின் அளவை நீட்டிக்கவே செய்கின்றன. வடிவேலுவின் மனைவியாக சித்தாரா கொஞ்ச நேரமே வந்து போனாலும் மனதில் நின்று போகிறார். விவேக் பிரசன்னாவுக்கு வில்லனாக ப்ரமோஷன். பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார்.

பகத் பாசிலின் அம்மாவாக ரேணுகா சில நிமிடம் வந்து போனாலும் நடிப்பில் தன் இருப்பை நிரூபிக்கிறார். பைக்கில் அடிபட்ட ஆட்டுக்கு கறாராக காசு கேட்கும் கிராமத்து நபராக டெலிபோன் ராஜ், சீரியஸான இந்த படத்துக்கு சிரிப்பு சூறாவளியாகிறார். இது சீரியஸ் படம் என்று சொன்னார்களோ என்னவோ, படம் முழுக்க முகத்தை சீரியசாகவே வைத்துக் கொண்டு வருகிறார் போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளா. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தேறவில்லை என்றாலும், அப்பா பாட்டை போட்டு கரையேறி விடுகிறார்.


ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, பைக் பயணம்,, அதில் வரும் ஊர்களை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாதியில் தேமே என்று செல்லத் தொடங்கும் கதை, இடைவேளைக்கு பிறகே வேகம் எடுக்கிறது. ஒருவர் திருடன் இன்னொருவர் கொலையாளி என்ற கோணத்தில் கதை போனாலும், மைய முடிச்சு இளம் சிறார்களுக்கு
நேரும் பாலியல் அத்துமீறல் பற்றி பேசுவதால் கிளைமாக்சில் கதை கனத்துக்குரியதாகி விடுகிறது. கேரளாவில் சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமான சுதீஷ் சங்கர் பெரிய துறையில் முதல் ஸ்டெப் பிலேயே முத்திரை பதித்து இருக்கிறார்.

Related posts

Leave a Comment