கூலி – திரைவிமர்சனம்

 

 

 

சென்னையில் ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் தேவா ( ரஜினி). ஒரு நாள் விசாகப்பட்டினத்தில் இருக்கும்

அவரது உயிர் நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ் ) இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் விரைகிறார். அங்கே சென்றபோது தான் சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தை தன் ஆளுமைக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் சைமன் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவன். தன் நிர்வாகத்தில் யார் தப்பு செய்தாலும் மரணம் நிச்சயம்.

அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூலித் தொழிலாளி காளி வெங்கட்டை தூக்கில் தொங்க விடுகிறார்கள். ( போலீஸ் உளவாளியாம். அதனால் இந்த கொடூர தண்டனை)

இந்த மாதிரி கொல்லப்பட்டவர்களின் பாடியை அங்கே இங்கே போட்டால் போலீஸ் கண்டுபிடித்து விடும். அதனால் பிரச்சனைகள் எழும் அல்லவா. அதற்காக ஒரு உடலை இரண்டே நிமிடத்தில் மின் தகனம் செய்யும் தொழில்நுட்பத்தை கைவசம் வைத்திருக்கும் ராஜசேகரை அணு குகிறார்கள். முதலில் மறுக்கும் அவரை, அவரின் இரண்டு பெண்களை சிறைப் பிடித்து சம்மதிக்க வைக்கிறார்கள். வேறு வழியின்றி ராஜசேகரும் அந்த எரிக்கும் பணியை உறுத்தலோடு செய்து வருகிறார். அங்கே நிகழும் ஒரு பிரச்சனையில் சைமனின் உதவி யாளர் தயாளனால் கொல்லப்படுகிறார்.

ராஜசேகர்.

ஒரு கட்டத்தில் இதை தெரிந்து கொள்ளும் தேவா, எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதே இந்த கூலி.

உயிருக்கு உயிரான நண்பர்கள் ரஜினியும் சத்யராஜும்.

நண்பன் மீது கொண்ட அதீத அன்பால் தன் தங்கையையே ரஜினிக்கு மணமுடித்துக் கொடுக்கிறார் சத்யராஜ். இந்த குடும்பங்களின் அன்யோனியத்தை, காட்ட, சிறு பிளாஷ்பேக் காட்சியாவது வைத்திருக்கலாம். படத்தின் மொத்த ஜீவனுக்கான இந்த காட்சி, வெறுமனே ரஜினியின் வாய்

வழி வசனமாக மட்டுமே வந்து போகிறது.

தேவாவாகரஜினி. நண்பனின் கொலைக்காக வில்லன் சாம்ராஜ்யத்தில் நுழையும் இடம் தொடங்கி, கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கும் வரை தனக்கே உரித்தான அதிரடி நடிப்பில் அட்டகாசம் செய்கிறார் ரஜினி. சுருதிஹாசன் தன்னை அவமானப்படுத்தும் ம் ஆரம்ப காட்சி தொடங்கி அதே சுருதிஹாசனின் உயிரை காப்பாற்ற போராடும் கிளைமாக்ஸ் காட்சி வரை சூப்பர் சொல்ல வைக்கிறார்.

அவரது உயிர் நண்பன் ராஜசேகராக சத்யராஜ். இருவரின் நட்பை இன்னும் ஆழமாக காட்டி இருக்கலாம்.

மெயின் வில்லனாக நாகார்ஜுனா ஈவிரக்கம் இல்லாத அந்த கேரக்டரில் கம்பீரம் காட்டுகிறார்.

அவரது உதவியாளராக வரும் சவுபின் சாஹிர் நடிப்பில் துவம்சம் செய்கிறார்.

நாகார்ஜுனாவின் மகனாக ரவி கண்ணா, அவரது காதலியாக ரக்ஷிதா. இவர்களில் ரக்ஷிதாவின் இன்னொரு முகம் அதிர வைக்கிறது.

படம் முழுக்க உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்த கேரக்டரில் சுருதிஹாசன் கன கச்சிதம்.

ரஜினியின் இன்னொரு நண்பனாக உபேந்திரா படத்தின் கூடுதல் எனர்ஜி.

 

கிளைமாக்சில் வந்து போகும் அமீர் கான், விக்ரம் படத்தில் வரும் சூர்யாவை நினைவு படுத்துகிறார்.

ஓரிரு காட்சி என்றாலும் சார்லி, காளி வெங்கட், மாறன், தமிழ் நடிப்பில் நிறைந்து நிற்கிறார்கள்.

அனிருத்தின் இசையில் ஓ ரீட்டா பாட்டை ரிப்பீட்டா கேட்கலாம்.

கதைக்காக ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும் இது ரஜினி படம் என்பதை உணர்ந்து இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

மொத்தத்தில் இந்த கூலி, செய்கூலி சேதாரம் இல்லாத தங்கம்.

Related posts

Leave a Comment