காயல் என்பது கடல் சார்ந்த இடம். கடலையும் ஒரு கதாபாத்திரமாக்கி ஒரு காதல் கதைக்கு வடிவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தமயந்தி. கடல் சார்ந்த ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கும் உயர்சாதி நாயகி காயத்ரிக்கும் காதல். காதலன் பெற்றோரை இழந்தவன் என்பதால் அவன் பக்கம் ரூட் கிளியர். ஆனால் காதலி தரப்பிலோ தந்தை சம்மதம் தர, தாய் மட்டும் பிடிவாதம் காட்டுகிறார். தாயை கன்வின்ஸ் பண்ண மகள் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போக, வேறு வழியின்றி மகள் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறாள். இதன்பின்பு எதிர்ப்பு தெரிவித்த அந்தத் தாயின் நிலை என்ன? போலீஸ்
உயர் அதிகாரியான தந்தையின் நிலை என்ன? அந்தக் காதலன், தனது காதலியின் மரணத்தை எப்படி எடுத்துக் கொண்டான் என்பதை உளவியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்லியிருக்கிற திரைக்கதை, சாதி பேதம் நிறைந்த சமூகத்துக்கு மறவாமல் சவுக்கடியும் தந்திருக்கிறது.
நாயகன் லிங்கேஷ், காதலியை இழந்த தவிப்பை ஆழ்ந்த அமைதி மூலமே நமக்குள் கடத்தி விடுகிறார். காதல் தோல்வி அடைந்த நிலையில் இன்னொரு காதல்
துரத்திக் கொண்டு வர அதை எதிர்கொள்ளும் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
இவரின் காதலியாக வரும் காயத்ரியின் தோற்றப் பொலிவும் நடிப்பும் அடடா ரகம். தனது காதல் தொடர்பாக தாயிடம் அவர் அனுமதி கேட்கும் இடத்தில், அது கிடைக்காமல் போக, ஆழமாய் தாயை ஒரு பார்வை பார்க்கிறாரே, அப்போதே அவரது முடிவை நினைத்து மனது பகீர் என்று ஆகி விடுகிறது. நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுமோல் தான் இந்தக் கதைக்கே நாயகி. அவரது மன மாற்றம் தான் கதையின் பிரதானம் என்பதால் அவரும் அதை உணர்ந்து உணர்ச்சிகளை அழகாக கடத்தியிருக்கிறார்.
அனுமோலின் கணவராக வரும் ஐசக்கின் கதாபாத்திரப் படைப்பும் அதற்கு அவர் உயிர் கொடுத்து இருக்கும் விதமும் சிறப்பு. பாசமுள்ள மகளை பறிகொடுத்த தந்தையின்
ஆற்றாமையை ஒவ்வொரு பிரேமிலும் பிரதிபலிக்கிறார். நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக வரும் ஸ்வாகதாவின் நடிப்பு பழுதில்லை. ஆனால் அந்த கேரக்டர் சூழ்நிலை மாறு பாட்டில் எரிச்சலூட்டுகிறது. மனநல மருத்துவராக ரமேஷ் திலக் கச்சிதம்.
பிச்சாவரம் வேளாங்கண்ணி ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளை மிக அழகாகத் திரையில் காட்டி ரசிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக்.
குடும்பத்திற்குள் சாதிய மனோபாவமும், பாகுபாடும் பெண்கள் மூலமாகவே நுண்ணியமாகப் பாவுகிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தமயந்தி. அனுமோலின் மனமாற்றம் எழுத்தாளர் தமயந்தியின் முத்திரை. கடலலையாய் தாலாட்டும் இசை இன்னொரு பிளஸ்.

