மதராஸ் மாபியா கம்பெனி — திரை விமர்சனம்

சென்னையில் பெரிய மாஃபியாவாக இருக்கும் ஆனந்தராஜுக்கு சென்னையின் பல இடங்களில் கிளைகள். எல்லாருமே அந்தந்த ஏரியாவுக்கு அவரால் நியமிக்கப்பட்ட ரவுடிகள். அதே நேரம் எந்த கிளை நிறுவனமும் தலைமை அனுமதி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. தலைமை உத்தரவிட்டால் யோசிக்காமல் உடனே செய்து முடித்து விட வேண்டும். இப்படியாக அடிதடியில் தொடங்கி கொலை வரை குற்ற செயல்கள் தடையின்றி நடந்து வருகின்றன. நகரில் எத்தனை குற்ற செயல்கள் நடந்தாலும் போலீசில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவாகாது. இதுதான் போலீசுக்கு தலைவலியாக இருக்கிறது. இந்நிலையில் ஆனந்தராஜ் மகள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவனை மிரட்டி தாக்கியதில் அவன் இறந்தே போகிறான். ஆனாலும் இளைஞரின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதற்கிடையே ஆனந்தராஜூக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுகிறது சம்யுக்தா தலைமையிலான போலீஸ் குழு. இதே சமயத்தில் தொழில் போட்டியில் உடன் இருப்பவர்களும் அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு பக்கங்களில் போடப்படும் திட்டங்களில் இருந்து அவர் தப்பித்தாரா? தனது ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’யைத் தொடர்ந்து நடத்தினாரா என்பது தான் இந்தப் படத்தின் மீதிக் கதை. பூங்காவனம் பாத்திரத்தில் ஆனந்தராஜ் சிரித்துக் கொண்டே செய்யும் வில்லத்தனம் மிரட்டல் ரகம். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா, ஆனந்தராஜை வேட்டையாட துடிக்கும் காட்சிகளில் காக்கி சட்டையின் கம்பீரம் தெரிகிறது. ஆக்சன் காட்சியிலும் அதிரடிக்கிறார்.

ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, கணவனை மட்டம் தட்டும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார்.
சக்களத்தி சண்டையில் சிரிக்கவும் வைக்கிறார்.

கொண்டித்தோப்பு வரதன் கதாபாத்திரத்தில் நானும் ரவுடிதான் என்று டம்மி ரவுடியாக முனிஷ்காந்த் சிரிக்க வைக்கிறார்.

ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா எல்லை தாண்டாத நடிப்பில் கவர்கிறார். இவரது பிளாஷ்பேக் சோகம் நம்மையும் கவ்வி பிடிக்கிறது அடியாள் பட்டியலில் ராம்ஸ் தனி இடம் பிடிக்கிறார்

ஆனந்த ராஜின் இரண்டாவது மனைவியாக சசிலயா, கிளைமாக்சில் வந்து போகும் ஷகிலா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வரும் குத்துப்பாட்டு தாளமிட வைக்கிறது
பின்னணி இசையிலும் குறையில்லை. வன்முறைக் கதையாகத் தொடங்கி நகைச்சுவையாக வளர்ந்து எதிர்பாராத திருப்பத்தில் முடிகிறது படம்.

திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் ஏ எஸ் முகுந்தன் ஒரு தாதா கதைக்குள் கலகலப்பை இணைத்து சுவாரசியம் கூட்டி இருக்கிறார். ஆனந்தராஜ் உலகைப் புரிந்து கொள்ளும் அந்த இறுதிக் காட்சி நிஜமாகவே தத்துவ முத்து.

Related posts

Leave a Comment