மகா சேனா — திரை விமர்சனம்

குரங்கணி மலைப்பகுதியில் வாழும் யாழி கிராம மக்களுக்கும் மலையடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்து மக்களின் தலைவன் செங்குட்டுவன் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.

யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அதே நாளில் அடிவார பகுதி மக்கள் சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டமிடுகிறார்கள்.

யாழி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலையை எதிரிகளிடம் இருந்து செங்குட்டுவன் பாதுகாத்தாரா? என்பது படத்தின் மீதிக் கதை.
செங்குட்டுவனாக விமல் வருகிறார். பெயருக்கேற்ற அந்த கம்பீர கேரக்டர் அவருக்கு கடைசி வரை ஒட்டவில்லை என்பது சோகம். நாயகியாக விமலின் இல்லத்தரசி பொம்மி யாக சிருஷ்டி டாங்கே வருகிறார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கோப தாபங்கள், பயம், கலக்கம், ஆவேசம் என எல்லாமே இவருக்குள் இருந்து ஊற்றாய் பொங்கி வருகிறது.
சாதாரண பெண்ணாகவும் ஆக்ரோஷமான பெண்ணாகவும் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவரது திரை வாழ்வில் இது முக்கிய படம்.
வனத்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் கொடுத்த காசுக்கு மேல் கூவும் பார்ட்டி என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார். படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார்.
யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
சிலை கடத்தல் கும்பலின் தலைவனாக கிளைமாக்ஸ்சில்
வந்து பரபரப்பு கூட்டுகிறார்
கபீர் துஹான் சிங். இவரது ஆஜானுபாகுவான தோற்றமே அந்த
வில்ல கேரக்டரோடு இவரை சுலபத்தில் இணைத்து விடுகிறது. கடைசி பத்து நிமிடம் மட்டுமே இவரது திரைப் பிரவேசம் என்றாலும் பெரும் புயலின் வேகம் இவர் நடிப்பில்.
அடிவார பகுதி மக்கள் தலைவி கங்காவாக வரும் மகிமா குப்தா அழகான
வில்லியாக
வசீகரிக்கிறார். விமலின் மகளாக வரும் சிறுமி இலக்கியா நடிப்புத் தென்றலாக வந்து போகிறார்.
இடும்பன் கதாபாத்திரத்தில் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியராக அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக சுபாங்கி ஜா பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
படத்தின் நிஜமான ஹீரோ என்றால் அது
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு தான். அந்த அழகிய காடுகளை அவரது கேமரா படமாக்கிய விதம் படத்தின் முழு முதற் பலம்.
ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். உதய் பிரகாஷ் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன் விலை மதிப்பு மிக்க கோவில் சிலையை அபகரிக்க முயலும் இரு வேறு கும்பலின் கதைக் களத்தில் ஒரு பரபரப்பான கதை சொல்ல முனைந்து அதில் பாதி வெற்றி பெற்றிருக்கிறார். கதையின் கம்பீரமான யானை பெயரளவில் வந்து போவது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஆனாலும் மலைக் கிராம மக்களின் அன்பும் அன்யோன்யமும் நம்மையும் அந்த காட்டுக்குள் பயணப்பட வைத்து விடுகிறது.
மகா சேனா, காட்டுக்குள் திருவிழா.

Related posts

Leave a Comment