கொம்பு சீவி – திரை விமர்சனம்

வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர்ப் பெரியமனிதராக வலம் வரும் சரத்குமாரின் அன்புக்கு பாத்திரமாகிறார். விசுவாச அடியாள் மாதிரி அவர் கூடவே இருக்கிறார். போகப்போக இருவரும் மாமா- மருமகன் என்று உறவு கொண்டாடும் அளவுக்கு அன்பில் ஐக்கியம் ஆகிறார்கள்.

எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்பது சண்முகபாண்டியன் ஆசை. ஒரு நாள் அது நடந்தே தீரும் என்கிறார் மாமா சரத்குமார்.
அதனால் சரத் -சண்முக பாண்டியன் இருவரும் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் அந்த ஊருக்குப் புதிதாக வந்த எஸ்பி. சுஜித் சங்கருடன் மோதல் ஏற்படுகிறது. எஸ்.பி.யோ கிட்டத்தட்ட ஒரு சைக்கோவின் மனோ பாவம் கொண்டவர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக சண்முக பாண்டியன் கைது செய்யப்படுகிறார். லாக்கப்பில் வைத்து அவரை போலீஸ் அடித்து துவைக்கிறார்கள். இதனால் ஆத்திரமாகும் மாமா போலீஸ் ஸ்டேஷனை தீ வைத்துக் கொளுத்துவதோடு மருமகன் சண்முக பாண்டியனையும் மீட்டு வருகிறார்.

இதை தங்களுக்கு நேர்ந்த கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளும் போலீஸ் எஸ் பி., மாமா-மருமகன் இருவரையும் வேட்டையாட துடிக்கிறார். தலை மறைவான மாமா மருமகன் இருவரையும் அவரால் பிடிக்க முடிந்ததா? இந்த களேபரத்துக்கு இடையில் மாமா மருமகன் இருவரும் ஆந்திராவுக்கு கஞ்சா கடத்தி செட்டிலாக முடிவு செய்கிறார் கள்.

இவர்கள் நினைத்தது நடந்ததா? அல்லது போலீஸ் பிடியில் சிக்கினார்களா? என்பது விறுவிறு கிளைமாக்ஸ்.

நாயகனாக நடித்திருக்கும் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், கிராமத்துக் காளையாக அதாவது கொம்பு சீவிய காளையாக காட்சிகளில் சீறிப் பாய்கிறார். இளங்கன்று பயம் அறியாது என்று சொல்வது போல்அவரது அதிரடி காட்சிகள் அனைத்தும் படத்துக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மாமா சரத்குமாருடன் சேர்ந்து அவர் ஆடும் கெட்ட ஆட்டம் அனைத்துமே ரசிகர்களின் கொண்டாட்டமாகி விடுகிறது.
காதல் காட்சிகளிலும் போதிய மதிப்பெண் பெறுகிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் சரத்குமார். நரைத்த தலை, மீசை என்று தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.
இந்த மாமா- மருமகன் கூட்டணி வரும்போதெல்லாம் காட்சிகளில் எனர்ஜி கூடி விடுகிறது.

நாயகியாக, நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகாவுக்கு காக்கிச்சட்டை கச்சிதமாக
பொரு ந்துகிறது. தன்னை ஒருதலையாக காதலிக்கும் சண்முக பாண்டியனை அதை வைத்தே கஞ்சா கேசில் மாட்டி விடும் இடம் நிஜமாகவே ரகளை மயம்.
காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், பூசாரி கல்கி ராஜா, செக்போஸ்ட் மதன்பாப், லாரி டிரைவர் முனீஸ் காந்த் படத்தின் நகைச்சுவைக்கு பெரிதும் உதவுகிறார்கள்.

காவல்துறை உயர் அதிகாரியாக வரும் சுஜித் சங்கர் ஓகே. சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா, சாமி வந்து ஆடும் இடத்தில் திரையரங்கை கலகலக்க வைக்கிறார். சில காட்சிகளே என்றாலும் அனுபவ நடிப்பில் ராம்ஸ் பிரகாசிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் கேமராவும் யுவன்ஷங்கர்ராஜாவின் இசையும் இரு பக்க தூண்களாக இருந்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், ஆழமான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதை மாந்தர்களை வைத்துக் கொண்டு அதை தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
சரத்குமார்- சண்முகபாண்டியன் கூட்டணி படத்தின் கலகலப்பை தக்க வைத்துக் கொள்வதோடு கிளைமாக்ஸ் வரை வேகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
மொத்தத்தில் கொம்பு சீவி, மாமா மருமகனுக்கான பாசப்பரிமாணம்.

Related posts

Leave a Comment