குழந்தை நட்சத்திரம் திலீப்ஸ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அவரின் தோழி சுகன்யா மேல் தட்டு வகுப்பை சேர்ந்தவர். பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிப்படிப்பை படிக்கும் போது நண்பர்கள் ஆகிறார்கள். இவர்கள் நட்பு மற்றவர்கள் பார்வையில் சாதி வேற்றுமையை மையப்படுத்தி வெளிப்படுகிறது.
இதே ஊரில் உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலிக்க, இளைஞனின் தந்தை அந்தப் பெண்ணை தன் வேலையாட்களுக்கு விருந்தாக்கி அவள் வாழ்க்கையை சீரழிப்பதோடு தன் மகனை இனிப்பில் விஷம் வைத்து சாகடிக்கிறார். காதலன் இறந்த சோகத்தில் காதலியும் உயிரை விடுகிறார்.
படத்தில் வரும் இந்த ஜோடியின் சோக முடிவே அடுத்து படம் எப்படி போகும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
துவக்கப்பள்ளியில் படிக்கும் திலிப்ஸ் சுகன்யா நட்பு, உண்மையான நட்பு மட்டுமே என்று இயக்குனர் சொல்லி இருந்தாலும், அவர்களின் அடுத்தடுத்த சந்திப்புகள் அதற்கு நேர் மாறாக இருக்கின்றன.
படம் ஆரம்பித்து முடியும் வரை ஜாதி துவேஷத்தை மட்டுமே பிரதானப்படுத்துவது பலவீனம். அந்த சிறு பெண்ணின் மேல் தட்டு தந்தையின் பாத்திரப்படைப்பு மட்டும் ஆறுதல்.
சிறுவன் திலிப்ஸ் தன் நடிப்பாற்றலை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாட்டியின் மரணம், தோழியின் மரணத்தில் ஒரு பண்பட்ட நடிகனைப் போல் தெரிகிறார்.
இவரின் தோழியாக வரும் சுகன்யாவுக்கு நடிப்பில் இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுத்து இருக்க வேண்டும்.
அதுபோல் இவர் இறுதிக்காட்சியில் கிணற்றில் விழுந்து இறப்பது ஏன் என்பதற்கு இயக்குனர் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் இறுதிக்காட்சியில் இவர் மரணம், அதனால் மனம் உடைந்த திலிப்சின் மரணம், இதைப் பார்த்து சிறுமியின் தந்தை அதிர்ச்சி மரணம் எல்லாவற்றிலும்
இழையோடும் செயற்கைத் தனம் மைனஸ்.
சோனியா அகர்வால் கேரக்டரில் மட்டும் ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள் இவர் திலீப்ஸின் தாய் என்பதும் கணவர் இறந்தவுடன் குழந்தைகளை பிரிந்ததற்கு சொல்லப்படும் காரணமும் ஏற்புடையதாக இல்லை.
பாரதிராஜாவின் சீடர் குரு இயக்கி இருக்கிறார். குருவின் படத்தில் இருக்கும் யதார்த்தம் சீடரின் படத்தில் மிஸ்ஸிங் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
பருத்தி என்ற தலைப்பை வைத்துக் கொண்டு ஜாதி ஏற்றத்தாழ்வை ஒரு பிடி பிடிக்க ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனர்.
