டியர் ரதி – திரை விமர்சனம்

ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம். எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் அவருக்கே உரிய கூச்ச சுபாவம் குறுக்கே வந்து தடை பண்ணி விடும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ என்னவோ அவரை தேடி வந்த 2 காதல் கூட பிரேக் அப்பில் முடிகிறது.
இப்படி இரண்டு காதல் கைவிட்டு போனதில் விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறார். பெண்களிடம் அவருக்கு இருக்கும் இப்படியான கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக அவரது அலுவலக நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு முதன் முதலாக கூச்ச சுபாவம் விலகி நட்பு பாராட்ட தோன்றுகிறது. அதனால், அந்தப் பெண்ணுடன் நட்பை தொடர விரும்புபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் டேட்டிங் செல்ல விரும்புகிறார். அதற்கு ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். இதே ஹஸ்லி அமானை ரவுடி கும்பல் ஒன்றும் தேடி வருகிறது. இவர்களில் உல்லாச நோக்கத்துடன் நாயகியை தேடி வந்து தனது துப்பாக்கியை பறிகொடுத்த போலீஸ்காரர் ஒருவரும் ஹஸ்லியை தேடும் பட்டியலில் இருக்கிறார்
நாயகனுடனான ஒருநாள் டேட்டிங் பயணத்தில் தன்னைத் தேடும் வெறிபிடித்த இந்த கூட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை நாயகிக்கு.
யார் இந்த பெண்? டேட்டிங் சமயத்தில் நாயகன் போட்ட காதல் அப்ளிகேஷனை நாயகி ஏற்றுக் கொண்டாரா? எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொண்டாரா?
என்பதை கதை போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனாக சின்னத்திரையில் இருந்து புரமோஷன் ஆகி இருக்கிறார் சரவண விக்ரம். வசீகர முகமும் தெளிவான உச்சரிப்பும் பெரிய திரையிலும் அவரை பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘இது தான் உங்களுக்கு பர்ஸ்ட் டைமா?’ என்று பாலியல் தொழிலாளி கேட்க, ‘ஆமாம். உங்களுக்கு?’
என்று திருப்பி கேட்கிற நேரத்தில் பாலியல் தொழிலாளியின் ரியாக்சனுக்கு அவர் காட்டும் முக பாவனை ‘நம்மாளு தேறிட்டார்யா’ என்று எண்ண வைக்கிறது.
ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான் இயல்பான நடிப்பால் அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார். என்றாலும் இவரது பாத்திரப்படைப்பு திரையில் சரிவர கையாளப்படவில்லை. தன் இருப்பிடத்திற்கு வந்து போன போலீஸ்காரரின் துப்பாக்கியை எதற்காக திருட வேண்டும் என்ற கேள்விக்கு போதிய விளக்கம் இல்லை.
காமெடித்தனம் கலந்த வில்லனாக வரதன் கதாபாத்திரத்தில் மிரட்ட முயற்சித்திருக்கிறார் ராஜேஷ் பாலச்சந்திரன்.
அவரது அடியாட்களாக வருபவர்களும் சீரியஸ் காட்சிக்குள் சிரிப்பை சிதற விடுகிறார்கள்.
காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் திரைக்கு புதியவர்களாக இருந்தாலும், நடிப்புக்கு புதியவர்களாக தெரியவில்லை.
லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவும்
எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையும் படத்தின் இரு பக்க தூண்கள்.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி,
பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளிகள் குறித்து பேசுவதோடு, அந்த தொழில் இந்தியாவில் உருவானது எப்படி என்பது வரை விவரிக்கிறார் விவரமாக கிளாஸ் எடுக்கிறார். அந்த கிளைமாக்ஸை இன்னும் கூட தெளிவாக சொல்லி இருக்கலாம்.
— சிற்சில குறைகள் இருந்தாலும் புதிய கதைக் களத்தில் ரதி ஜொலிக்கவே செய்கிறாள்.

Related posts

Leave a Comment