விடுதலைப் புலிகளின் மருத்துவ அணிக்குத்தான் சல்லியர்கள் என்று பெயர். போர் சமயத்தில் காயம் பட்ட வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களின்
பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது இந்த சல்லியர்கள்.
இந்தப் போரில் குண்டடி பட்டு உயிருக்கு போராடும் விடுதலை புலிகளை மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்றினர் என்பது தான் மனிதநேயத்தின் மகத்துவம் சொல்லும் வரலாறு.
இப்படி உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது ஆளும் அரசின் அதிகாரப்பார்வை விழுகிறது.
அவர்களை அழிக்க முயல்கிறது.அந்தத் தாக்குதல்களை மருத்துவமனை சல்லியர்கள் குழு எப்படி எதிர்கொண்டது என்பது கிளைமாக்ஸ்.
சிங்களப் படையை எதிர்த்து போரிடும் புலிகள் காயமடைந்தால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய போர்க்களத்தில் பதுங்குகுழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அப்படி அமைக்கப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி,ஓய்வு ஒழிச்சலின்றி அதே நேரம் கொஞ்சமும் சலிப்பின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவுவதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார். இவர்கள் கேரக்டர்கள் மூலம் சல்லியர்களின் தீரத்தையும் தியாகத்தையும் உலகறியச் செய்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் சத்யாதேவி, அர்ப் பணிப்புடன் கூடிய மருத்துவராகவே மாறிவிட்டார்..அவருடைய உடல்மொழி மற்றும் செயல்பாடுகள் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்து அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறது.
மருத்துவர் செம்பியனாக நடித்திருக்கும் மகேந்திரன் இயல்பான நடிப்பில் தனது கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார்.
நாயகியின் தந்தை மதியழகனாக வரும் கருணாஸ் தமிழீழக் குடிமகனாகவே மாறியிருக்கிறார். வசன உச்சரிப்புகளிலும் அந்த உணர்வைக் கொண்டு வந்திருக்கிறார். மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் மரண பயமில்லாத அவரது அந்த கடைசி வினாடி நடிப்பில் கூட முத்திரை பதித்து விடுகிறார்.
சிங்களப் படையினராக நடித்திருக்கும் திருமுருகன்,
சந்தோஷ்,மோகன் ஆகியோர் நம் வெறுப்பை சம்பாதிக்கும் அளவுக்கு அந்த குரோத நடிப்பில் வெளுத்து வாங்குகிறார்கள்.
காதல் ஜோடியாக வந்து தேசத்தின் காவல் ஜோடியாக மாறி போகும் கேரக்டரில் நாகராஜ் – பிரியலயா ஜோடி கவனம் பதிக்கிறார்கள்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, போர்க் கொடுமைகளையும் சிங்களக் கொடூரங்களையும் காட்சிப்படுத்தி கலங்க வைக்கிறது.
கென் மற்றும் ஈஸ்வர் இசையமைத்திருக்கிறார்கள்.வைரமுத்து மற்றும் இயக்குநர் கிட்டு ஆகியோர் பாடல்கள் இசை வடிவில் உயிரை உலுக்கிப் பார்க்கிறது.
கலை இயக்குநர் முஜூபீர் ரஹ்மானின் உழைப்பில் பதுங்கு குழி
மருத்துவமனைகள் நேற்றைய நிஜத்தை கண்களுக்குள் பதித்துப் போகிறது.
எழுதி இயக்கியிருக்கும் கிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய வரலாற்றைக் காட்சிப்படுத்தி இருக்கிறார். தமிழர்களின் வீரத்தையும் அறவுணர்வையும் எதிரியானாலும் உயிர்காக்கும் மனித மாண்பையும் உலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார். எந்த நேரத்திலும் நிகழும் வீர மரணத்தை அருகில் வைத்துக் கொண்டே மனித உயிர்களை காக்கும் பணிக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்ட சல்லியர்களின் தியாகத்திற்கு ஒரு வீர சல்யூட்.
இந்த படம் ஓடிடி ப்ளஸ் இணைய தளத்தில் ஜனவரி 2 முதல் முதல் காணக்கிடைக்கிறது.
