முதலமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
கட்சித் தலைமை அனுபவம் ஆற்றல் வாய்ந்த சீனியர் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, இறந்து போன முதலமைச்சரின் மகனோ, ‘நாளை நானே முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்’ என்கிறார், அதிரடி பிளஸ் அடாவடியாக. எதிர்த்து கேட்பவர்களின் வாயை பணத்தால் அடைக்கிறார்.
இதே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப்
படுகிறார்கள். அவர்களை மீட்பதற்கு காவல்துறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட சுதீப் போராடுகிறார். அவரிடம் முதலமைச்சரின் கொலைக்கு ஆதாரமான வீடியோ இருக்கும் தகவல் சொல்லப்பட்டு, அதைத் தேடி கண்டுபிடிக்கும் பணியும் தரப்படுகிறது.
ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி சாகச பயணம் மேற்கொள்கிறார் கிச்சா சுதீப்.
இந்த இரண்டு சம்பவங்கள் இடையிலான தொடர்பையும் கண்டு பிடிக்கும் கிச்சா, அதில் மாபெரும் அரசியல் இருப்பதையும் தெரிந்து கொள்கி றார்.
தடைகளை தாண்டி கடத்தப்பட்ட சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததா? Rவீடியோ ஆதாரத்தை கைப்பற்றி முதலமைச்சர் பதவி ஏற்பை தடுக்க முடிந்ததா என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அதிரி
புதிரி கிளைமாக்ஸ்.
இடை நீக்கம் செய்யப்பட்டதாலோ என்னவோ கடைசி வரை காக்கிச்சட்டை அணியாமலே தனது அதிரடி வேட்டையை தொடர்கிறார் கிச்சா. ஒரே நேரத்தில் 50 பேரை தூக்கி பந்தாடினாலும் அது நம்பும்படி இருப்பது இவரது நடிப்புச் சிறப்பு.
ஓடுகிறார். துரத்துகிறார். சுடுகிறார். எதிரிகளைப் பந்தாடுகிறார். எல்லாமே அவரது ஸ்டைலில் ரசிக்கும் படி இருப்பது வெகுஜன ரசிகர்களின் கொண்டாட்டமாகி விடுகிறது.
கழுத்தளவு தண்ணீரில் இருந்து சிறுவர்களை தூக்கிச் சுமக்கும் போது அந்த ஹீரோயிசம் நம்ப வைக்கிறது.
எப்போதும் துப்பாக்கியும் கையுமாக வந்து கொன்னுடுவேன் என்று மிரட்டுகிற வில்லனாக நவீன் சந்திரா தன் பங்குக்கு கில்லி அடிக்கிறார்.
மற்றொரு வில்லனாக வரும் குரு சோமசுந்தரம் வில்லத்தனமும் நகைச்சுவையுமாய் அந்த கேரக்டரில் பளிச்சிடுகிறார்.
ருத்ரனாக வரும் விக்ராந்த் குறைந்த காட்சிகளில் வந்தாலும் குறை குறை இல்லாத நடிப்பை தந்து போகிறார்.
காமெடிக்கு என்று கொண்டு வரப்பட்டாலும் வருகிற சில காட்சிகளில் அதுவும் சில இடங்களில் 🤧மட்டுமே சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, அருள் தாஸ், சுப்பு பஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை சிறப்பாகவே 🤧rதந்துள்ளனர்.
கதையின் பெரும் பகுதி இரவில் நடந்தாலும் அந்த குறை தெரியாத அளவிற்கு சரியான ஒளி அமைப்பைக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஆக்சன் காட்சிகள் தெறிக்கின்றன.
படத்தில் 6 சண்டை இயக்குநர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். சண்டைக்காட்சி வரும் இடங்களில் எல்லாம் உற்சாகம் ரசிகர்களிடம்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, திருப்பங்கள் நிறைந்த காட்சிகளை அடுக்கடுக்காக அடுக்கி இருக்கிறார். அதுவும் சுவாரசியமாகவே.
ஒரு சாதாரண கதையை மாஸ் ஹீரோவுக்கான கதையாக மாற்றியதே இவரது வெற்றிக்கான வாசலையும் திறந்து விட்டிருக்கிறது.
இந்த மார்க், மார்க்குகளில் அடங்காத மகோன்னதம்.
