பராசக்தி- விமர்சனம்!

1964 கால கட்டத்தில் உச்சத்திலிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் மையக்கதை என்றாலும் சினிமாவிற்காக அந்தக் கதையை கமர்சியலாக கையாண்டுள்ளார் இயக்குநர். கதைப்படி சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் புறநானுற்றுப் படையின் முக்கியஸ்தர். அவரை ஒடுக்கும் அதிகாரியாக ரவிமோகன் வருகிறார். பர்சனலாக சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். அந்த இழப்பின் காரணமாக
சிவகார்த்திகேயன் போராட்டக்களத்திலிருந்து பின் வாங்குகிறார். அதன்பின் அவரது தம்பி போராட்டத்தை கையிலெடுத்து இறந்து போகிறார். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் வெகுண்டெழுகிறார். போராட்டத்தில் வெற்றியடைந்தாரா? என்பதே பரபரப்பான பராசக்தி

இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் போராளியை சிவகார்த்திகேயன் கண்முன் நிறுத்துகிறார். அவரின் அபார நடிப்பு படத்திற்கு யானை பலம். ரவிமோகன் வில்லனத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சிவகார்த்திகேயனின் தம்பியாக வரும் அதர்வா மனதில் பதியும்படி நடித்துள்ளார். ஸ்ரீலீலா தெலுங்கு பேசும் பெண்ணாக வருகிறார். காதல் காட்சிகளிலும் போராட்டக்காட்சிகளிலும் போதிய கவனம் பெறுகிறார்

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது 100-ஆவது படம் .அதனால் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதால் திரையில் படத்தோடு பாடல்களைப் பார்க்கும் போது இன்னும் உற்சாகம் கிடைக்கிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தக் காலத்திற்கேற்ப வண்ணங்களை திரையில் கொண்டு வந்துள்ளார்.

படம் துவங்கும் போதே அதிரடி ஆக்சனோடு துவங்குவதால் பெரும் பரபரப்பு நம்மைப் பற்றிக்கொள்கிறது. படம் முடியும் வரை அது வற்றவே இல்லை. இன்றைய தலைமுறைக்கு நல்லதொரு பாடமாகவும், என்றைக்கும் மதிக்க வேண்டிய நல்லதொரு படமாகவும் வந்துள்ளது இந்த பராசக்தி

Related posts

Leave a Comment