Project Hail Mary – விமர்சனம்

உலகத்தையே தனி ஆளாகக் காப்பாற்றுகிறான் அமெரிக்க நாயகன் என்ற ஹாலிவுட் ஃபார்முலாவில் வந்திருக்கும் மற்றொரு படம். ஆனால் வழக்கமான ஹாலிவுட் மசாலாவாக இல்லாமல் ஸ்லோவாகப் பயணிக்கும் ஒரு கிளாஸிக்கான படமாக வந்துள்ளது ப்ராஜெக்ட் ஹெயில் மேரி. இப்படத்தை லார்ட் மில்லர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் இரட்டையர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளனர். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் நிறுவனத்தால் இந்தியாவில் வெளியிடப்படுகிறது.

*கதை…*

ஆஸ்ட்ரோஃபேஜ் (Astrophage) எனும் நுண் உயிரிகள் சூரியனின் ஒளியை மெல்ல மங்கச் செய்கிறது. அதனால் அடுத்த 30 வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. அதை எப்படியேனும் தடுக்கப் பார்க்கிறார்கள் ஈவா ஸ்ட்ராட்டால் ஒருங்கிணைப்படும் விஞ்ஞானிகள். பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் மூலக்கூறு உயிரியிலாளரான நாயகன் ரைலாண்ட் கிரேஸை பூமியைக் காக்கும் ப்ராஜெக்ட் ஹெயில் மேரிக்குள் கொண்டு வருகிறார் ஈவா ஸ்ட்ராட்.

சூரிய குடும்பத்தில் இருந்து மிகத் தொலைவில் கண் விழிக்கும் ரைலாண்ட் கிரேஸ், மூவர் குழுவில் தான் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதை அறிகிறார். தூண்டப்பட்ட கோமாவினால் மறதி நோய்க்கு உட்படும் ரைலாண்டிற்குத் தான் ஏன், எப்படி விண்கலத்தில் வந்து சேர்ந்தோம் என்பது நினைவுக்கு வருகிறது. ஆஸ்ட்ரோஃபேஜால் பாதிக்கப்படாத ‘டெள சீ-டை (Tau Ceti)’-இற்குச் சென்று, எப்படி அந்நட்சத்திரம் ஒளி மங்காமல் தப்பியது என்பதை ஆராயவேண்டும். சேகரிக்கும் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி, சூரியனைக் காப்பாற்றுவதே ப்ராஜெக்ட் ஹெயில் மேரியின் நோக்கம்.

ரைலாண்ட் கிரேஸிற்கு இது ஒரு தற்கொலைப் பயணமாகும். அவரிடம் மீண்டும் பூமிக்குத் திரும்பிச் செல்லுமளவு எரிபொருள் இல்லாததால், அவரது பயணம் ஒரு வழிப்பயணமேயாகும். டெள சீ-டையில் ஏற்கெனவே ஒரு ஏலியன் விண்கலம் ஒன்று வந்திருக்க, அதனுடன் நாயகன் செல்லும் ஹெயில் மேரி விண்கலம் பொருத்திக் கொள்கிறது. அது எரிட் எனும் நட்சத்திரத்தில் இருந்து வந்த விண்கலம் என்றும், அவ்விண்கலத்தில் 5 கால்களும், கருங்கல் உடலும் கொண்ட ராக்கி எனும் வினோத வேற்றுகிரகவாசி மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறது என்பதும் நாயகனுக்குத் தெரியவருகிறது.

மனிதனும், வேற்றுகிரகத்தைச் சேர்ந்த ராக்கியும், ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து, ஆஸ்ட்ரோஃபேஜ்களை அழிக்கும் வழியைக் கண்டுபிடிக்கின்றனர்.

*நடிகர்கள்…*

ரைலாண்ட் கிரேஸாக ரையன் காஸ்லிங் நடித்துள்ளர். சில கதாபாத்திரங்கள் திரையில் வந்து போனாலும், முழுப் படத்திலும் வியாபித்திருப்பது ரையன் காஸ்லிங் மட்டும். இப்படத்தில் அவர் ஒரு தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டரை மணி நேரப் படத்தைத் தனியாளாகச் சுமக்கும் மிகப் பெரிய பொறுப்பை நிறைவாகச் செய்துள்ளார். கதையின் ஆன்மா புரிந்து, அதில் மூழ்கினால் மட்டுமே இது சாத்தியம். அதை ரையன் காஸ்லிங் அழகாக உள்வாங்கி அமர்க்களப்படுத்தியுள்ளார்.

ஐமேக்ஸ் போன்ற பெரிய ஸ்க்ரீன்களில் காண வேண்டிய படம் இது. சாகச விரும்பிகளுக்கு சற்றே போரடிக்கலாம். ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட படங்களில் ஆர்வமுடையவர்களுக்கும், நிதானமாகப் பயணிக்கும் கிளாஸிக்கான படத்தைக் காணும் பொறுமையுடையவர்களுக்கும் இப்படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை நிச்சயம் தரும்.

Related posts

Leave a Comment