நிர்பயா – குற்றவாளிகளுக்கு தூக்கு ; 4வது முறையாக புதிய தேதி அறிவிப்பு!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில்,  குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பிறப்பிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராண இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில்,  முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. *எனினும் தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வந்தனர். இதனால், தண்டனை ஜனவரி 22, பிப்ரவரி 14,மார்ச் 3 ஆகிய தேதிகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு 3 முறை தள்ளிப் போடப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளில் இதுவரை கருணை மனுவை அனுப்பாத பவன் குப்தா, ஜனாதி பதிக்கு கருணைக் கடிதம் அனுப்பினான். மேலும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்தான். அவனது சீராய்வு மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவனது கருணைக் கடிதத்தை நிராகரித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ந்தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட  உத்தரவிட்டுள்ளது. மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment