ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் விமர்சனம்

மேட்டல் எனும் பொம்மை செய்யும் கம்பெனிக்காக வரையப்பட்ட சாகச நாயகனான ஹீ-மேன், அனிமேஷன் டி.வி. தொடராக அறிமுகமான பின் மிகவும் பிரபலமானார். டால்ஃப் லண்ட்க்ரென், ஹீ-மேனாக நடித்து 1987 இல் வெளியான படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மீண்டும் 2009 இல், ஹீ-மேன் படத்தை எடுக்க, அமிரெக்கன் ஸ்டுடியோவான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸுடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் முயற்சி செய்தது. பல தடங்கல்களையும் தாமதங்களையும் கடந்து, அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் 2025 இல் தான் ஹீ-மேன் படத்தைத் தொடங்கியது.

எட்டர்னியாவில் இருந்து சிறுவன் ஆடம் க்ளென், ‘சக்தி வாள் (Sword of Power)’ உடன் பூமிக்கு அனுப்பப்படுகிறான். வரும் வழியில் அவ்வாளை ஆடம் தவறவிட்டுவிட, வாலிபனான பின்னும் தேடிக் கொண்டே இருக்கிறான். அந்த வாள் இருக்குமிடம் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில், பீஸ்ட் மேனைப் பூமிக்கு வரவைத்து விடுகிறான். அவ்வாளையும் ஆடமையும் காப்பாற்றி எட்டர்னியாவிற்கு அழைத்துச் செல்கிறாள் டீலா.

அந்த வாளின் சக்திக்காகப் பதினைந்து வருடங்களாகக் காத்திருக்கும் வில்லனான ஸ்கெலெட்டர், அவ்வாளை அபகரிக்க முயற்சி செய்கிறான். வாளின் உதவியால் சூப்பர் ஹீரோ ஹீ-மேனாக மாறுகிறான் ஆடம். ஸ்கெலெட்டரின் முயற்சி பலித்ததா, அல்லது எட்டர்னியாவை நிர்மூலமாக்கிய ஸ்கெலெட்டரை ஹீ-மேன் பழிவாங்கினாரா என்பதுதான் படத்தின் கதை.

டங்கன் எனும் பாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார். சீரியசான கதாபாத்திரமாக அறிமுகமானாலும், அதன் பின் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ‘தோல்வியடைவது பிரச்சனை இல்லை; ஆனால் மீண்டும் உறுதியாக எழுந்து நிற்கவேண்டும்’ என சிறுவன் ஆடம்க்குச் சொல்லித் தருகிறார். டங்கன், தோற்றுவிட்டோம் என வருந்தும்போது இளைஞனான ஆடம் அவர் கற்பித்தப் பாடத்தையே நினைவுறுத்தித் தேற்றும் காட்சி ரசிக்க வைக்கிறது.

தன் நாட்டைக் கைப்பற்றிய வில்லனிடமிருந்து, மீண்டும் நாட்டை மீட்கிறான் நாயகன் எனும் எளிய கதையை, அதன் எளிமை குன்றாமல் திரைக்கதையாக்கியுள்ளனர். ஹீ-மேனாக நடித்துள்ள நிக்கோலஸ் கலிட்ஸைனும் மிகக் கச்சிதமான தேர்வு. சூப்பர் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளத்தக்க உடலமைப்பைப் பெற்றுக் கவர்கிறார். இந்தப் படத்தின் பலமே அதன் நடிகர்கள்தான் எனச் சொல்லவேண்டும். திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, சுவாரசியமோ இல்லாவிட்டாலும், இயக்குநர் ட்ராவிஸ் நைட், க்ரேஸ்கல் கோட்டையின் ஹீ-மேனை ரசிக்கும்படி திரையில் உலாவ விட்டுள்ளார்.

Related posts

Leave a Comment