சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்று மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நடிகர் சௌந்தரராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சமூகப் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

Leave a Comment