ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006-ஆம் ஆண்டு முதல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது.

ஓவியர் ஜீவானந்தனுக்கு விருது:
கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது. இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தன் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை!
பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காகச் செயல்படும் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன :

1. திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:
திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’. இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026 – 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

2. ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:
ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சுடர்’. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் திரு. நடராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

3. ‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:
சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பு. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவர்களைப் பாராட்டி, திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள் பேசியதாவது:
மாணவ – மாணவிகளுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிற ஒரே ஒரு விஷயம் — கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். அந்த ஒன்றுதான் அடிப்படை. நீங்கள் ஏழைப் பெற்றோருக்கு பிறந்தீர்களா, பெற்றோர் இழந்த குழந்தைகளா, கிராமத்தில் பிறந்தீர்களா — எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையிலும் போய் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் மனதில் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சின்ன, மிகச் சின்ன உதாரணம் நான்.

நாங்க படிச்ச காலத்துல பள்ளிக்கூடம் என்று ஒன்று கிடையாது, பள்ளிக்கூட கட்டிடம் கிடையாது, வாத்தியார்கள் முறையா கிடையாது. எல்லாம் பிரைவேட் பள்ளிக்கூடம், பிரைவேட் வாத்தியாரு. ‘கலங்கள்’ என்பது எங்க கிராமத்துல இருந்து கரெக்டா நாலு ஃபர்லாங் தூரத்துல இருக்குது. அதுல ஜி.டி. நாயுடு பிறந்த ஊரு. அதுல ஊருக்கு நடுவுல ஒரு மொட்டை மண்டபம், 30 அடிக்கு 60 அடி நீளத்துல ஒரு மண்டபம். அந்த மண்டபத்துல தரையெல்லாம் தூசி படிஞ்சுட்டு இருக்கும். நாங்க ஊர்ல இருந்து வரும்போது வழியில மாடு சாணம் போட்டுருக்கும். அந்த சாணத்தை எல்லாம் நாங்க எடுத்துட்டு வந்து, கூடையில் போட்டு, ஒரு சட்டிக்குள்ள போட்டு நல்லா கரைச்சு, அந்த சாணத்துல நாங்க தான் தரையில மெழுகி குடுப்போம், இல்லைன்னா உள்ள புழுதி பறக்கும். அதை மெழுகி விட்டு, அதுலதான் நான் உட்கார்ந்து படிச்சோம். சைடுல யார் வேடிக்கை பார்ப்பாங்கன்னு மூங்கில் தட்டி அடிச்சு, ஒரு மூணு மூங்கில் தட்டி சுத்தியும் மறைச்சிருப்போம்.

எங்க வாத்தியார் கல்யாணசுவாமி நாயுடு. அவர் 1940-களிலேயே ஸ்டேட் மேத்ஸ்ல ஸ்டேட் செகண்ட் வாங்கினவர். 1940-கள்ல மேத்ஸ்ல மிகப்பெரிய ஆளு. அவரு பிரைவேட் பள்ளிக்கூடம் வச்சிருக்காரு. ஒன்னாம் கிளாஸுக்கு 1 ரூபாய், ரெண்டாம் கிளாஸுக்கு 2 ரூபாய், மூணாம் கிளாஸுக்கு 3 ரூபாய், நாலாம் கிளாஸுக்கு 4 ரூபாய்—இதான் மாச ஃபீஸ்.   நான் ரெண்டாம் கிளாஸ் படிச்சேன், எங்க அக்கா மூணாம் கிளாஸ் போனாங்க. நாங்க படிச்ச காலத்துல ஒரு சவரன் தங்கம் வந்து 12 ரூபாய். அப்போ அக்காவுக்கு 3 ரூபாய், எனக்கு 2 ரூபாய்னா 5 ரூபாய், கிட்டத்தட்ட பாதி சவரன் விலை. நான் பிறந்து 10 மாச குழந்தையா இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டார். காலம் பூரா எங்க அம்மா வெள்ளைச் சேலையில தான் நான் பார்த்திருக்கேன். நம்ம காடு கரையில பாடுபட்டு, ஒரு காய்ஞ்சு போன பூமியை எங்க அப்பா விட்டுட்டு போயிருந்தாரு. அதுல பாடுபட்டு தான் எங்க அம்மா படிக்க வச்சாங்க. அதனால 5 ரூபாய் மாசத்துக்கு செலவு பண்ண முடியாதுனு எங்க அக்காவை மூணாம் கிளாஸோட நிறுத்திட்டாங்க.

கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கல்வி ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, நன்றாகப் படித்து முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. தடைகளைத் தாண்டி அவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இந்த பயணத்தில் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமே. இனி கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது. மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன், கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் திரைக்கலைஞர் சூர்யா பேசியதாவது, இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. இது வந்து 47 வயசுன்னா வந்து வீட்ல எப்படி ஒரு பிறந்தநாள் நடக்குமோ, அந்த மாதிரி ஒரு ஒரு முறையும் இது குடும்ப நிகழ்ச்சியா மட்டுமே தான் பார்க்கிறோம். ஒரு ஒரு முறையும் இந்த குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டே தான் இருக்குது. இங்க வந்திருக்கிற, இன்னைக்கு வந்திருக்கிற மாணவ – மாணவிகள் அவங்களோட சாதனைகளைச் சொல்லி, ஒரு ஒரு வாட்டியும் பரிசு எடுத்துட்டு போகும்போது, எவ்வளவு விஷயங்கள் தாண்டி வந்திருக்காங்க, எவ்வளவு விஷயங்கள் கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பா பார்க்கிறேன். அப்பாவோட வழிகாட்டுதல் தான். இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமா வந்து இதை எடுத்துட்டு போக முடியுது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டிருக்கோம். இப்படித்தான் வந்து எங்களை எல்லா விஷயத்தையும் இங்க கண் முன்னாடி வந்து நிப்பாட்டி இருக்காங்க.

அகரம் வந்து 20 வருஷம் கடந்தாச்சு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால வந்து தொட முடிஞ்சிருக்கு. இன்னும் இன்னும் இன்னும் பல விஷயங்கள் வந்து அகரம் மூலமா நடந்துட்டே இருக்குது. இன்னும் வந்து அதோட எடுத்துக்கிட்ட நோக்கம் வந்து குறையாம இருந்திருக்குது. இன்னும் அது இன்னும் சிறப்பா நடந்துட்டு இருக்கு அப்படின்னா, அதுக்கு முக்கியமா வந்து கல்யாணி ஐயா மாதிரி முக்கியமானவங்க வந்து நம்ம கூடவே கை கோர்த்து நின்னுட்டு இருக்காங்க. சமூகப் பார்வைனா என்ன? யாருக்காக பண்ண போறோம்? எதுக்காக பண்ண போறோம்? அப்படிங்கிற மறுபடியும் மறுபடியும் அவங்க வச்ச கேள்விகள், நம்ம கூட இருக்கிற வழிகாட்டிகளும் சரி, மாணவர்களும் சரி… இப்ப அகரமை முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள் அத்தனை பேருக்கும் அந்த பார்வையை சரியா பாத்துக்கிட்டது வந்து இவங்கள மாதிரி நிறைய வழிகாட்டிகள் தான். அதனாலயே எங்க ஆரம்பிச்சமோ, அங்க மட்டுமே அதை மட்டுமே பண்ணிராம, இன்னும் யார் யாருக்குத் தேவை? இன்னும் யார் யார் தேவைப்படும் குழந்தைகள்? இன்னும் யாரை எல்லாம் கை பிடிச்சு கூட்டிட்டு வரணும் அப்படின்னு தேடும்போது வந்து, நிறைய இஸ்லாமிய சமூகத்திலும் சரி, நிறைய மாணவிகள் நிறைய கல்வி இடைநிற்றல் எல்லாம் இருக்காங்க அப்படிங்கிறது தெரிய வந்துச்சு. அங்க போய் சில வேலைகள் பண்ண முடிஞ்சுச்சு. மலைக் கிராமத்துல போய் வேலைகள் பண்ண முடிஞ்சது. கடலோர பகுதிகளில் வேலைகள் பண்ண முடிஞ்சது. அதுமாதிரி தேவைகள் அப்படின்னு பார்த்தா இன்னும் ஏராளமா ஏராளமா இருக்கு.

2006-ல மாணவர் பத்திரிக்கையாளரா அறிமுகம் ஆன ஞானவேல் அவர்கள் கேட்ட அந்த ஒரே கேள்விதான்: “முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் இருக்காங்க. 12த் ஸ்டாண்டர்ட் எக்ஸாமை ஒரு மலைக் கிராமத்துல இருக்கிற ஒரு மாணவியும் எழுதுறாங்க, ஒரு மீனவ கிராமத்துல இருந்து ஒரு மாணவி எழுதுறாங்க. அங்க பல பகுதிகளில் ஆசிரியரே கிடையாது. ஆனா எல்லாரும் ஒரே பரீட்சைதான் எழுதுறாங்க. அவங்களை நீங்க பார்க்கிறீங்களா? அவங்க இருக்காங்கன்னு தெரியுமா? அதுலயும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கன்னு தெரியுமா?”ன்னு ஒரு கேள்வி கேட்டாரு. ஏன் எங்க அப்பா வந்து அப்போ 60-ல 50-ல எல்லாம் வந்து மெட்ராஸ்க்கு கிளம்பி வந்தாங்க. நீங்க சொல்றது எல்லாம் வந்து 50 வருஷத்துக்கு முன்னாடிங்க. இப்ப எல்லாம் எங்க முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க? அப்படின்னு சாதாரணமா பேசினோம். “இல்லைணா, முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கணா” அப்படின்னு 2006-ல சொன்னாரு. இப்ப 2026. இப்போதும் முதல் தலைமுறை மாணவர்கள் வந்து படிச்சு வெளியில வந்துட்டு இருக்காங்க. அகரம் அவங்களை தேடி போயி, அவங்களை வெளியில கொண்டு வந்து, யார் யாருக்கு உதவி தேவைப்படுதோ அவங்க கேட்கக் கூட வேண்டாம், அகரம் அங்க போய் அவங்களை வெளியில கூட்டிட்டு வந்து, அவங்களுக்கு வந்து இந்த உலகத்தை, இந்த வெளிச்சத்தைக் காமிக்குதுன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு அத்தனை பேருக்கும் நான் நன்றியை சொல்லிக்கிறேன்.

சினிமாலயே வந்து கிட்டத்தட்ட இப்போ 28, 29 வருஷம் ஆகப்போகுதுன்னு சொல்றாங்க. சினிமால இருந்து நான் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லணும் பார்க்கிறேன். சினிமால வந்து ‘ரீடேக்ஸ்’ (Retakes) அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி வந்து ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 30 வாட்டி கூட ‘ரீடேக்ஸ்’ போவோம். ஒரு ஒரு வாட்டியும் அது தப்பாகும்போது வந்து டைரக்டர் வந்து “நீ ஃபெயில்” அப்படின்னு சொல்ல மாட்டாரு. “ஒன் மோர்” அப்படிம்பாரு. நான் டைரக்டரை வந்து வாழ்க்கையா பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட “இன்னொரு வாட்டி பண்ண போறேன், ஒன் மோர்”னு சொல்லுங்க. “இன்னொரு வாட்டி பண்ண முடியும்”னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது, அதுவே முடிவு கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் “ஒன் மோர்”. இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும். So, there is always “one more” அப்படிங்கறதை வந்து ஞாபகம் வச்சுக்கோங்க. எதுவுமே முடிவு கிடையாது அப்படிங்கிறதை தயவுசெஞ்சு மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன்.

இன்னொன்னு ரிஹர்சல்ஸ் (Rehearsals). நீங்க ஒரு ரெண்டரை மணி நேரம் படம் பார்த்துடுறீங்க, ஆனா கைதட்டலே வாங்காத பல வாட்டி வந்து அந்த விஷயத்தை நாங்க வந்து ரிஹர்ஸ் பண்ணிருப்போம். பல வாட்டி ரிஹர்சல் போயிட்டே இருப்போம், அதுக்கெல்லாம் கைதட்டல் எல்லாம் கிடையாது. சோ, அதுதான் வந்து உங்களை உருவாக்குறதுன்னு நான் சொல்லுவேன். அந்த ரிஹர்சல்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். நமக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதுக்கு முழு மனசோட, முழுசா சரண்டர் ஆகி பண்ணிட்டே இருந்தா என்ன முடியாதோ அதை நாம பண்ண முடியும். நீங்க எடுத்த உடனே வந்து ஒரு ஒரு சின்ன கலையோட, ஒரு ஸ்கில்லோட வந்து வரணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அது வந்து ஒரு ‘கன்சிஸ்டன்சி’ (Consistency) அப்படின்னு சொல்லுவாங்க. திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை பண்ணா அதுல நம்ம வந்து மேம்பட முடியும், அதுல முதன்மையா வர முடியும். அது வந்து ஒரு கோடிங்கா (Coding) இருக்கலாம், இல்லாட்டி டிராயிங்கா (Drawing) இருக்கலாம், அல்லது ஓட்டப் பயிற்சியா இருக்கலாம், வேறு எதுவா வேணாலும் இருக்கலாம். கன்சிஸ்டன்சி திரும்ப திரும்ப திரும்ப அதை ரிஹர்சல்ஸ் பண்ணும்போது அதுதான் நம்ம உருவாகுற இடம் அப்படின்னு நான் சொல்லுவேன். எல்லாத்துக்குமே ஒரு முதல் படிக்குன்னு ஒன்னு இருக்குது. நான் சினிமாக்கு வரும்போது நடிக்கவெல்லாம் தெரியாது, எதுவுமே தெரியாது. திரும்ப திரும்ப பண்ண ரிஹர்சல்ஸ்தான் இங்க 29 வருஷத்துக்கு அப்புறமா நிக்க வச்சிருக்கு. என்னால வர முடியும்னா நீங்க எதுல எல்லாம் ஆசைப்படுறீங்களோ அது எல்லாத்துலயும் உங்களால வர முடியும்.

அப்புறம் ‘கிரெடிட்ஸ்’னு (Credits)… படம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு கிரெடிட்ஸ்னு வந்து எவ்வளவு பேர் அந்த படத்துக்காக வேலை செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது அவங்களோட பேரோட வரும். ஒரு ஹீரோங்கிறது தனியா நான் அப்படியே நடந்து அப்படியே வெளியில வந்துறது இல்லை. அவ்வளவு உதவி இயக்குநர்கள் இருப்பாங்க, எழுத்தாளர்கள் இருப்பாங்க, காஸ்ட்யூம்ஸ் இருப்பாங்க, மேக்கப் இருப்பாங்க, டிரைவர்ஸ் இருப்பாங்க, ஆயா இருப்பாங்க, லைட்மேன் இருப்பாங்க. இவங்க எல்லாரோட உழைப்பின் மூலமாதான் வந்து ஒருத்தனால வந்து வெளியில வர முடியுது.

நம்ம ஒரு வாழ்க்கையில மேல வந்துட்டோம் அப்படின்னா வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காம, பக்கத்துல லெஃப்ட்ல, ரைட்ல நம்ம கூட யார் இருந்திருக்காங்க? நம்ம இங்க வர்றதுக்கு யார் உதவியா வந்திருக்காங்க? நமக்கு யார் நமக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க அப்படிங்கிற அவங்களை மறந்துட வேண்டாம். அவங்களை தயவுசெஞ்சு ஞாபகம் வச்சுக்கோங்க. அதே மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா, நம்ம ஒருத்தரையாவது மேல உயர்த்தணும். அவங்களோட கிரெடிட்ல வந்து நம்ம பெயர் இருக்கணும்.

நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் (Reels) பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதனால வந்து நம்ம ஒண்ணுமே கத்துக்க போறதே கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். கனவு உலகமா பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த கனவு உலகத்துலயே தான் நாம இருப்போம். எலான் மாஸ்க் எங்கிருந்து ஆரம்பிச்சாரு? 24 மணி நேரத்துல 23 மணி நேரம் வேலை செய்வாராம். ஒரு மணி நேரம் தான் வந்து தூங்குவாராம். அந்த மாதிரி எங்கிருந்து ஆரம்பிச்சாங்க? ஆரம்பிச்ச பயணம் எங்கிருந்து இங்க வந்தாங்க அப்படிங்கிறதை வந்து வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காம, நிறைய பாட்காஸ்ட் (Podcast) இருக்கும், அவங்களை பத்தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்கும், அதெல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். உங்கக்குள்ள இருக்கிற டேலன்ட்டை (Talent) வெளியில எடுத்துட்டு வர்றதுக்கு அவை உதவும்.

சினிமால இருந்து நான் கத்துக்கிட்டது மறுபடியும் ‘ரீடேக்’—ஒன் மோர் கேளுங்க, ‘ரிஹர்சல்’ பண்ணுங்க, ‘கிரெடிட்ஸ்’—நம்ம யாருக்காக எதுனால இங்க வந்தோமோ, எதுனால இவ்வளவு தூரம் வந்தோமோ அதை மறந்துட வேண்டாம். So, always ask for one more அண்ட் ஒருத்தரையாவது நாம் மேல உயர்த்தறதுக்கு முயற்சி பண்ணுவோம். வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது, நம்புங்க. என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே நாம் ஆக முடியும். ரொம்ப ரொம்ப நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment