ரஜினி என்ற மந்திரச் சொல்!!

தமிழ் சினிமா பல ஹீரோக்களை கண்டிருக்கிறது. சிலரை மட்டும் கொண்டாடிக் இருக்கிறது.
அப்படி ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குரிய ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
திரையில் பொன்விழா கண்ட பிறகும் ரசிகர்களின் கொண்டாடத்துக்கு உரியவராகவே இருந்து வருவது சாதாரண விஷயம் அல்ல. தனக்கே உரித்தான ஸ்டைல் நடிப்பால், நடத்தையால், அன்பால் மெல்ல மெல்ல ரசிகர்களை ஆகர்ஷித்தவர் இவர்.

இந்த மேஜிக் கூட உடனடியாக நடந்து. விடவில்லை. நடிப்புக்கும் அவருக்குமிடையே ‘சென்னை To பெங்க
ளூர் தூரம்’ இருந்தது. பஸ் கண்டக்டர் ஆகத்தான் தன் கேரியரை தொடங்கினார். ஆசைக்காக அவ்வப்போது உள்ளூர் நாடகங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு வர வேண்டுமென்றால் திரைப்பட நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். நடிப்புக் கல்லூரி இருப்பதோ சென்னையில். நண்பர்கள் செய்த பண உதவியில் சென்னையில் நடிப்புக் கல்லூரியிலும் சேர்ந்தார். நடிப்புக் கல்லூரி மாணவர்களின் நடிப்பை எடை போட வந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பார்வையில் பட்டார். அவர் சினிமா பயணம் தொடங்கியது அங்கே தான்.

‘தமிழ் கற்றுக்கொள். நானே என் படத்தில் உன்னை அறிமுகம் செய்கிறேன்’ என்றார், பாலச்சந்தர்.
நடிப்பு ஆர்வம் தமிழ் கற்க வைத்தது. உச்சரிப்பில் மட்டும்
சிற்சில பிழைகள் .
ஆனாலும் பாலச்சந்தர் தனது அபூர்வ ராகங்கள் படத்தில் பைரவி புருஷனாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் ஹீரோ கமல்ஹாசன். ஹீரோயின் ஸ்ரீவித்யா. படத்தில் இவரது பெயர் தான் பைரவி. படத்தில் பைரவி புருஷனாக அந்த வீட்டின் கேட்டை திறந்தவருக்கு, கூடவே சினிமா கேட்டும் திறந்தது தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே
பட த்தில் ரஜினி ஏற்ற பரட்டை என்ற கேரக்டர் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. அந்தப் படத்தில் அவர் அடிக்கடி சொல்லும் ‘இது எப்படி இருக்கு’ வசனம் , பின்னாடி இதே பெயரில் ஒரு படம் வரும் அளவுக்கு பிரபலமாக இருந்தது.

அப்போதெல்லாம் ஹீரோவாகும் எண்ணம் ரஜினிக்கு இருந்தது இல்லை. அதற்காக அவர் முயன்றதும் இல்லை. ஆனால் வந்தது அந்த வாய்ப்பு, தானாகவே! தயாரிப்பாளர் கலை ஞானம் தனது பைரவி படத்தில் துணிந்து அவரை ஹீரோ ஆக்கினார். கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும் அந்த கேரக்டர், நண்டு ஊறுது நரி ஊறுது என்று சோகத்தில் பாடிய போது
தங்கள் நனைந்த கண்களை துடைத்துக் கொண்டார்கள், தாய்க்குலங்கள்.
சும்மா விரைப்பு காட்டுறார்… சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் பண்றார்…
குணச்சித்திர மெல்லாம் வருமா இவருக்கு? என்று கேட்டவர்களுக்கு
மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை முள்ளும் மலரும் ஜானி, பஞ்சு அருணாசலம் தயாரித்த புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்கள் பதிலாக அமைந்தது. தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு பதிவாகவும் அமைந்தது. குறிப்பாக ‘முள்ளும் மலரும்’ காளியை கொண்டாடி தீர்த்தார்கள் ரசிகர்கள். இதற்கிடையே
ஏவிஎம்.முக்காக எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முரட்டுக்காளை படம் அந்த படத்தில் காளையனாக வாழ்ந்த ரஜினியை வீர தீர பிரதாபனாக இனம் காட்டியது.
அதுவரை சீரியஸாக நடித்து கொண்டிருந்த ரஜினியை கலகலப்பு ஹீரோவாக வசூல் நாயகனாக திரைக்கு கொண்டு வந்தது இந்த படமே.

விடுதலை, நான் வாழ வைப்பேன், ஜஸ்டிஸ் விஸ்வநாத் போன்ற படங்களில் நடிகர் திலகம் சிவாஜி யுடன் சேர்ந்து நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் இணைந்த படிக்காதவன் திரைப்படம் இவரை மாஸ் லெவலுக்கு எடுத்துச் சென்றது. அந்த மாஸ் இன்று ஜெய்லர்-2 வரை அவரை விடாமல் பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறது. வயது ஏற ஏற தனக்கான கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்ததும் கூட இவரது தொடர் வெற்றிக்கான காரணங்கள் எனலாம். அதற்கான அடையாளத்தை சந்திரமுகி படம் தொடங்கி வைத்தது. நாயகியை மையப்படுத்திய அந்த படத்திலும் ரஜினி முத்திரை ஏராளம் ஏராளம்.700 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக் குவித்தது படம்.


வயது 76 ஆனாலும் 26 கூட இவரது தீவிர ரசிகர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இப்போது வரை குழந்தைகளின் ஆதர்ச நாயகன் இவர். தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் வெற்றிக்குப் பின்னால் கூட வயது வித்தியாசம் இல்லாத அதாவது ஆறிலிருந்து அறுபது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். தலைவன் வெற்றியை தாங்கள் வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார் கள்.

அன்று கண்டக்டராக இருந்தபோது பயணிகளை வழிநடத்த விசில் அடித்தார் ரஜினி. இப்போது அவர் படம் ஓடும் திரையரங்குகளில் அவரை காணும் போதெல்லாம் மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க விசில் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இப்போது சொல்லுங்கள் ரஜினி என்பது மந்திரச் சொல் தானே…

Related posts

Leave a Comment