பீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான ‘சங்கராபரணம்’ திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர்

இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம்,  அதிநவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இம்மாதம் மீண்டும் வெளியாகிறது. பீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மேம்படுத்தப்பட்ட 4கே அல்ட்ரா ஹெச்.டி காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலி அமைப்புடன் புதுப்பொலிவுடன் வெளியிடுகின்றனர். இத்திரைப்படத்தின் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார்.

கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’, இந்தியப் பாரம்பரிய இசையின் மேன்மையையும், ஒரு கலைஞனின் வாழ்வையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்த திரைப்படமாகும். ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜ்யலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல தசாப்தங்களைக் கடந்தும் இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள இத்திரைப்படம், இன்றும் ஒரு மகத்தான திரையனுபவமாகத் திகழ்கிறது.

கே.வி. மகாதேவன் இசையமைப்பில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கும் குரலில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத இசை பொக்கிஷங்களாக திகழ்கின்றன. குறிப்பாக, ‘சங்கரா…’ பாடல் இந்தியத் திரையிசை வரலாற்றில் என்றும் போற்றப்படும் ஓர் இசைச் சிகரமாக விளங்குகிறது. தலைமுறைகள் பல கடந்தும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் இப்படத்தின் மற்ற பாடல்களும் இசை ரசிகர்களின் இதயங்களில் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியச் இசையின் பாரம்பரியத்தையும், அதன் உன்னதமான பண்பாட்டு விழுமியங்களையும் உலகறியச் செய்த இத்திரைப்படம், தேசிய அளவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு  திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘சங்கராபரணம்’, 1980ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடம் இருந்து தங்கப் பதக்கத்தையும் பெற்றது. மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரையிடப்பட்ட பெருமையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.

தற்போது புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டுள்ள ‘சங்கராபரணம்’, ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரையனுபவத்தை வழங்கவுள்ளது. குறிப்பாக, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் என்றும் இனிமை குறையாத குரலை 7.1 சரவுண்ட் ஒலி அமைப்பில் பெரிய திரையில் கேட்டு ரசிப்பது இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமையும்.

இத்திரைப்படத்தின் மறுவெளியீடு, ஏற்கெனவே இப்படத்தைப் பார்த்து ரசித்த மூத்த தலைமுறை ரசிகர்களுக்கு தங்களின் இனிய நினைவுகளை மீண்டும் திரையில் கொண்டாடும் வாய்ப்பாக அமையும். அதேவேளையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கும் இந்தியத் திரையிசையின் உன்னதமான படைப்புகளில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படத்தின் பெருமையையும், அதன் காலத்தால் அழியாத இசை மாயாஜாலத்தையும் பெரிய திரையில் அனுபவிக்கும் அரிய வாய்ப்பை வழங்கும்.

Related posts

Leave a Comment