‘தாதா 87’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஆனந்த் பாண்டி, படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் சாருஹாசன், சாதிகள் இருக்க கூடாது என்று நினைத்து வாழ்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டி போட்டுகிறார்கள்.

இந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜனகராஜ், தனது மகள் நாயகி ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஸ்ரீபல்லவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஆனந்த் பாண்டி. எப்படியாவது ஸ்ரீபல்லவியை காதலில் விழ வைக்க வேண்டும் என நினைத்து தினமும் பின் தொடர்கிறார். இந்த விஷயம் ஜனகராஜ்க்கு தெரிந்து, போலீசில் புகார் கொடுக்கிறார்.

இருந்தாலும், ஸ்ரீபல்லவியை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவி, ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலை ஏற்றுக் கொண்டபின் தான் ஒரு திருநங்கை என்பதை ஆனந்த் பாண்டியிடம் சொல்லுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? அதன்பின் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக ஆனந்த் பாண்டி துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். நடிப்பில் ஓரளவிற்கு ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக வரும் ஸ்ரீபல்லவி, கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வன செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் அனுபவ நடிகை போல் தெரிகிறார்.

தாதாவாக வரும் சாருஹாசன், சாதிகள் ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதும், மனைவியாக வரும் சரோஜாவுடன் ரொமன்ஸ் செய்வதும் என நடிப்பில் மிளிர்கிறார். தாதாவுக்கான கெத்தும், கணவருக்குண்டான பாசம், ரொமன்ஸ் என வித்தியாசம் காண்பித்திருக்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் ஜனகராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெறுகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. உண்மையான காதலுக்கு எதுவும் தடையில்லை என்பதை சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுகள். குறிப்பாக திருநங்கையின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் ஆழமாக சொல்லியிருக்கிறார். மேலும் திருநங்கைகளின் பெற்றோர்களின் வலி, சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மற்றவர்கள் அவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார். படத்தின் முதற்பாதி திரைக்கதை அங்கும், இங்கும் சென்றாலும், பிற்பாதியில் தான் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதற்பாதியில் சாதி அரசியல் பற்றி சொன்னவிதம் அருமை. சாருஹாசனை கையாண்ட விதம் சிறப்பு.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. லியாண்டர் லீ மார்ட்டி, அல் ருஃபன், சக்கரவர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

Related posts

Leave a Comment