கமல் கட்சி சின்னம் ’டார்ச் லைட்’

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல், 39 கட்சிகளுக்கான சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில், கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். வெள்ளை நிறம் கொண்ட கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்றது.

கமல் தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதில், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா உள்பட 14 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் சிறப்புரை ஆற்றி வருகிறார்.

அதில் அவர், ‘வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்’ என்று சுட்டிக்காட்டி வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் காமெடி நடிகை கோவை சரளா இணைந்தார். இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வகையில், பொதுவான சின்னம் கேட்டு, கமல் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார்.

அதில், மக்கள் நீதி மய்யம் சார்பில் 3 சின்னங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. துடைப்பம், டார்ச் லைட் சின்னம் ஒரே மாதிரி இருந்ததால் சுயேச்சை சின்ன பட்டியலில் இருந்து கடந்த தேர்தலில் ‘பேட்டரி டார்ச்’ சின்னம் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று தலைமை தேர்தல் ஆணையம் கமலின் கட்சி உட்பட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 39 அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னங்களை ஒதுக்கி 32 பக்க அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், வருகிற மக்களவை தேர்தலில், மேற்கண்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கணசங்கம் பார்ட்டி ஆப் இந்தியா கட்சிக்கு ‘லேடி பிங்கர்’ சின்னம், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) ‘பேட்டரி டார்ச்’ சின்னம், கம்யூ. பார்ட்டி ஆப் இந்தியா (எம்-எல்) (லிபரேசன்) கட்சிக்கு (திருச்சி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி) கொடியுடன் கூடிய 3 நட்சத்திரம் சின்னம் என, 39 கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பாணை விபரங்களை, தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத் குமார் சர்மா, அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி உள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் ‘பேட்டரி டார்ச்’ ைலட் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து, கமல் தனது டுவிட்டர் பதிவில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment