விமானி அபிநந்தனின் புகைப்படத்தைப் போட்டு பாஜ ஆதாயம் தேடுவதாக எழுந்த புகாரையடுத்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படம் பயன்படுத்தத் தடைவிதித்து, தேர்தல் ஆணைய செயலர் பிரமோத் குமார் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய போது அவர்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததின் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, மக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் ஆரம்பக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நடவடிக்கையை பாஜ தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை உறுதி செய்யும் வகையில், உத்திர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் உள்ளூர் பாஜ நிர்வாகிகள் சிலர், பல இடங்களிலும் விமானி அபிநந்தன் புகைப்படத்துடன் பேனர்களை ஒட்டியுள்ளனர்.
கடந்த வாரம் டில்லியில் நடந்த பாஜவின் தேர்தல் பிரசார பைக் பேரணியில் டில்லி பாஜ தலைவர் மனோஜ் திவாரி, ராணுவ உடையில் அந்த பேரணியில் கலந்து கொண்டார். இதேபோன்று, நாடு முழுவதும் பல இடங்களில் அபிநந்தன் புகைப்படம் போடப்பட்டு பாஜவினர் பேனர்கள் வைத்து பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரசார யுக்திக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் பலரும் மத்திய பாஜ அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்திய கடற்படை முன்னாள் தலைவர் எல். ராமதாஸ் இவ் விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘தேர்தல் ஆணையம் ராணுவ நடவடிக்கைகள், ராணுவத்தினர் புகைப்படங்கள் மற்றும் ராணுவ சீருடைகளை எந்தக் கட்சியும் பிரசாரத்துக்குப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.
அதன் எதிரொலியாக, ‘அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்தக்கூடாது’ என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களைத் தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. அதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.